Subscribe:

interesting

ஒலிம்பிக் போட்டி வரலாறு

ஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது.
ஒலிம்பிக் போட்டி வரலாறு

கி.பி. 393-ல் அப்போதைய கிரேக்க அரசர் தியோடிசியல் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு தடைவிதித்தார். பின்னர் 1890-ல் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டன.

கிரேக்கர்களின் கடவுள்களில் ஒருவரான ஜியஸ் கடவுளை போற்றும் வகையில் கொண்டாடப்பட்ட திருவிழாவின் ஒரு பிரிவுதான் ஒலிம்பிக்போட்டி. இந்த போட்டியில் கிரேக்க மரபினர் மட்டுமே கலந்து கொண்டனர். அப்போதைய கிரேக்க சாம்ராஜ்யம் ஸ்பெயின், துருக்கி வரை பெரியாதாக இருந்தது.

போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஆலிவ் இலைகளால் ஆனா கிரிடம் சூட்டப்பட்டது.

இந்த ஒலிம்பிக் போட்டியை புதுபிக்க பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பேரன் பியரி டி குபர்டின் என்பவர் விரும்பினார். அதன்படி 1896 ஏப்ரல் 6 -ம் தேதி ஏதென்ஸ் நகரில் பல நாடுகள் கலந்து கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமானது. இந்த போட்டியை அப்போதைய கிரிஸ் அரசர் முதலாம் ஜார்ச் அரசன் தொடங்கிவைத்தார்.

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 உலக நாடுகள் கலந்து கொண்டன. தடகள போட்டிகள், குத்துசண்டை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், சைக்கிள் ரேஸ், நீச்சல், ஜிம்னாஸ்டிக், பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் இதில் இடம் பெற்றன.

ஒலிம்பிக்கின் 11-வது நாள் மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மராத்தான் போட்டியில் கிரேக்க வீரர் ஸ்பிரி டான் லூயின் தங்கம் வென்றார்.

1914-ம் ஆண்டு பேரான் டி.குபர்ட் ஒலிம்பிக் கமிட்டியின் 20-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் சங்க மாநாட்டின் போது வெள்ளை நிறத்திலான ஒலிம்பிக் கொடியை நிர்வாகிகளிடம் வழங்கினார்.

1920-ல் ஆன்ட் லெர்ப் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போதுதான் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும் ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்தபடி அமைந்திருக்கும். இது ஒலிம்பிக்கில் பங்குபெரும் 5 கண்டங்களையும் குறிக்கும். மேல்புற வரிசையில் நீலம், கருப்பு, சிகப்பு நிறத்திலும் கீழ்வரிசையில் மஞ்சள், பச்சை நிறத்திலும் வளையங்கள் அமைந்திருக்கும்.

1920-ல் ஏற்றப்பட்ட கொடியைதான் 1984-ம் ஒலிம்பிக் வரை பயன்படுத்தினர். 1988 சியோல் ஒலிம்பிக்கில்தான் பழைய கொடி மாற்றப்பட்டது. புதிய கொடி ஏற்றப்பட்டது.

1896-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் சேர்த்துக் கெள்ளப்படவில்லை. 1900-ம் ஆண்டு பாரிசில் நடந்த 2-வது ஒலிம்பிக் போட்டியில் கோல்ப், வில்வித்தை, டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

1928-ல் தான் பெண்கள் தடகள போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. த்ற்பொது ஒலிம்பிக் பொட்டியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் ஒருசில நாடுகள் சர்வதேச போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை விதித்து உள்ளன.

1992- பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளின் போது ஈரான் நாட்டு கொடியை ஒரு ஸ்பானிய பெண் ஏந்திவர தேர்வு செய்யபட்டதால் அந்நாட்டு அணியினர் ரகளை செய்துவிட்டனர். அல்ஜிரியா நாட்டு வீராங்கனை ஹஸிபா பவுஸ் மெர்கா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போதுதிறந்த காலுடன் ஓடி அசிங்கப்படுத்தினார் என்று அந்நாட்டு பழமைவாதிகள் கூறினர். சிட்னி ஒலிப்பிக்கில் பெண்கள் சாதனைகளே அதிகமாக பேசப்பட்டது.

இதுவரை ஒலிம்பிக் போட்டி நடந்த இடங்கள்:

எதென்ஸ்-1896
பாரீஸ்-1900
செயின்ட் லூயிஸ்-1904
லண்டன்-1908
ஸ்டாக்ஹோம்-1912
ஆண்ட்வெர்ப்-1920
பாரீஸ்-1924
ஆம்ஸ்டர்டாம்-1928
லாஸ் ஏஞ்சல்ஸ்-1932
பெர்லின்-1936
லண்டன்-1948
ஹெல்சின்சி-1952
மெல்போர்ன்-1956
ரோம்-1960
டோக்கியோ-1964
மெக்சிகோ-1968
முன்ஜி-1972
மோன்தொல்-1976
மாஸ்கோ-1980
லாஸ் ஏஞ்சல்ஸ்-1984
சியோல்-1988
பார்சிலோனா-1992
அட்லாண்டா-1996
சிட்னி-2000
எதென்ஸ்-2004
பீஜிங்-2008

27 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு தென்ஆப்பிரிக்க தலைவர் மண்டேலா விடுதலை

27 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு தென்ஆப்பிரிக்க தலைவர் மண்டேலா விடுதலை
தென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.
கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார்.
அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961_ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 1962_ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.
தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964_ம் ஆண்டு ஜுன் 12_ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.
பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988_ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.
மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.
"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.
இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11_2_1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மண்டேலா 1962_ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.
மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11_2_1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னிகை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.
ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெலிவிஷன் மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
மண்டேலா விடுதலையானதும், பிரதமர் வி.பி.சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மண்டேலா விடுதலையான சிறிது நேரத்தில் அவரிடம் பிரதமர் வி.பி.சிங் எழுதிய பாராட்டுக் கடிதம் கொடுக்கப் பட்டது. "உங்களது சுதந்திர போராட்டத்துக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று வி.பி.சிங் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-
"இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.
நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும்.கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.
இவ்வாறு மண்டேலா கூறினார்.
மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள்.1918_ம் ஆண்டு ஜுலை மாதம் 18_ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர்.
மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 1941_ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரி யாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.
அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.
5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958_ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2_வது மனைவி மூலம் 2 குழந்தைகள்.
உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல் லிக்கு வந்து அந்த விருதை பெற்றார்.மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை. 1994 மே 10_ந்தேதி அவர் தென்ஆப்பிரிக் காவின் அதிபர் ஆனார்.
அவர் அதிபர் ஆனபின், 1998_ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

தோல்விகளைக் கண்டு அஞ்சாத ஏவி.எம். எதிர் நீச்சல் போட்டு சாதனை படைத்தார்

தோல்விகளைக் கண்டு அஞ்சாத ஏவி.எம். எதிர் நீச்சல் போட்டு சாதனை படைத்தார்

"முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து, சினிமா உலகில் அரும் பெரும் சாதனைகளை நிகழ்த்தி, கணக்கில் அடங்கா கலைஞர்களை உருவாக்கியவர், ஏவி.மெய்யப்ப செட்டியார். "ஏவி.எம்" என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஏவி.மெய்யப்ப செட்டியாரின் சொந்த ஊர் காரைக்குடி. 1907 ஜுலை 28_ந்தேதி பிறந்தார். நடுத்தர நகரத்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தகப்பனார் ஆவிச்சி செட்டியார், காரைக்குடியில் "ஏவி.அண்ட் சன்ஸ்" என்ற கடையை நடத்தி வந்தார். காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வித்யா சாலையில் பள்ளிப் படிப்பை பயின்ற மெய்யப்ப செட்டியார், தகப்பனாருக்கு உதவியாக இருந்து கடையையும் கவனித்து வந்தார்.
1928_ம் ஆண்டில், இந்த "ஏவி.அண்ட் சன்ஸ்" நிறுவனம், கிட்டப்பா, சுந்தராம்பாள் ஆகியோரின் இசைத்தட்டுக்களை 5 தென் மாவட்டங்களுக்கு விற்பனை உரிமை பெற்றது. இந்த வேலையாக அடிக்கடி சென்னை சென்ற மெய்யப்ப செட்டியார், அங்கு நாராயண அய்யங்கார் (பிற்காலத்தில் "நாராயணன் அண்டு கம்பெனி" அதிபர்), சிவம் செட்டியார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து "சரஸ்வதி ஸ்டோர்ஸ்" என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனம் ஜெர்மன் "ஓடியன்" கம்பெனியுடன், இசைத்தட்டுக்களை தயாரிக்கும் ஒப்பந்தம் செய்து கொண்டது. முன்பு, வெறும் கர்நாடக சங்கீதப் பாடல்கள் மட்டுமே இசைத்தட்டுகளாக வந்தன. ஆனால், இவர்கள் பாமர மக்களுக்கு பிடித்தமான கிராமியப் பாடல்களையும் இசைத்தட்டுகளாக வெளியிட்டனர்.
"வண்ணான் வந்தானே... வண்ணாரச் சின்னான் வந்தானே", "ட்ரியோ... டேயன்னா...", "கழுகு மலை குருவிக்குளம்..." என்பன போன்ற இசைத் தட்டுகள் அமோகமாக விற்பனை ஆயின. அக்காலத்தில் சினிமா படங்கள் 20 ஆயிரம் அடி நீளத்தில் 40, 50 பாடல்களுடன் தயாராகி வந்தன.
சாதாரண நடிகர், நடிகைகளை வைத்து குறைந்த பாடல்களுடன், நீளம் குறைந்த படங்களை தயாரிக்க முடிவு செய்தார், ஏவி.எம். அதன்படி, 1934_ல் கல்கத்தா சென்று தனது முதல் படமான "அல்லி அர்ஜுனா"வை ரூ.80 ஆயிரம் செலவில் தயாரித்தார்.
அதில் பெரும் நஷ்டம். அடுத்து "ரத்னாவளி" என்ற படத்தை தயாரித்து (செலவு ரூ.1 லட்சம்) 1936_ல் தீபாவளிக்கு வெளியிட்டார். இதுவும் தோல்வி. 1937_ல் புனா சென்று "நந்தகுமார்" என்ற தனது 3_வது படத்தை எடுத்தார். இந்த படத்தில்தான் டி.ஆர்.மகாலிங்கம் பாலகிருஷ்ணனாக அறிமுகமானார்.
சொந்தக் குரலில் பாடாமல் இரவல் குரலில் பாடும் முறை, முதன் முதலாக இப்படத்தில்தான் புகுத்தப்பட்டது. தேவகி வேடத்தில் நடித்த பெண்ணுக்குப் பாடத்தெரியாது. அப்போது மும்பையில் பிரபல பாடகியாக இருந்த லலிதா வெங்கட்ராமனின் பாடலைப் பதிவு செய்து, தேவகிக்காகப் பயன்படுத்தினார்கள்.
"நந்தகுமார்" ஓரளவு நன்றாக ஓடிய படம். என்றாலும், நஷ்டம்தான். இப்படி வரிசையாக மூன்று படங்களும் தோல்வி அடைந்தாலும், ஏவி.எம். மனம் தளரவில்லை. தோல்விக்குக் காரணம் என்ன என்று நிதானமாக யோசித்தார். சொந்தத்தில் ஸ்டூடியோ இல்லாததே இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்.
சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கத் தீர்மானித்து, சிலருடன் கூட்டு சேர்ந்து 1940_ல் சென்னையில் "பிரகதி ஸ்டூடியோ"வை தொடங்கினார். ரூ.1 லட்சம் செலவில் தொடங்கப்பட்ட அந்த ஸ்டூடியோவில் முதன் முதலாக "பூகைலாஸ்" என்ற தெலுங்கு படத்தை தயாரித்து வெளியிட்டார்.
ஆந்திராவில் அதற்கு நல்ல வரவேற்பு. 25 வாரம் ஓடியது. தொடர்ந்து 5 ஆண்டுகளில் "வசந்த சேனா", "அரிச்சந்திரா", "வாயாடி _ போலி பாஞ்சாலி", "சபாபதி" ஆகிய படங்களை தயாரித்தார். இதில் "சபாபதி"யை ஏவி.மெய்யப்ப செட்டியாரே டைரக்ட் செய்தார். அவர் டைரக்ஷன் பொறுப்பை ஏற்ற முதல் படம் இது.
1941 டிசம்பரில் வெளியான "சபாபதி" வெற்றிப்படமாக அமைந்தது. பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை கதை இது. வசனத்தையும் அவரே எழுதினார். கதாநாயகனாக டி.ஆர்.ராமச்சந்திரனும், அசட்டு வேலைக்காரன் சபாபதியாக காளி என்.ரத்தினமும், கதாநாயகியாக பத்மாவும் நடித்தனர். கே.சாரங்க பாணியும் உண்டு.
"சோடா கொண்டு வா" என்று ராமச்சந்திரன் சொன்னால், சோடா பாட்டிலை கொண்டு வந்து நீட்டுவார், காளி என்.ரத்தினம். "முட்டாள்! உடைச்சு கொண்டா!" என்றால், உள்ளே போய் பாட்டிலை துண்டு துண்டாக உடைத்து தட்டில் கொண்டுவருவார்! இப்படி, ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த படம், சபாபதி.
இந்தப் படத்தில், கதாநாயகன் டிஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச்சம்பளம் 67 ரூபாய். கதாநாயகிக்கு 45 ரூபாய். படத்தின் மொத்த செலவே 32 ஆயிரம் ரூபாய்தான். பின்னர் "என் மனைவி" என்ற நகைச்சுவைப் படத்தைத் தயாரித்தார். கே.சாரங்கபாணி, கே.ஆர். செல்லம் முக்கிய வேடத்தில் நடித்த இப்படத்தை சுந்தர்ராவ் நட்கர்னி டைரக்ட் செய்தார். நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த இந்தப்படமும் வெற்றி பெற்றது.

சிறை வாசத்துக்குப்பின் பாகவதரின் `ராஜமுக்தி' அதிர்ச்சி தோல்வி


சிறை வாசத்துக்குப்பின் பாகவதரின் `ராஜமுக்தி' அதிர்ச்சி தோல்வி
"லடசுமி காந்தன்" கொலை வழக்கில் சிறை சென்ற பாகவதர், விடுதலையான பிறகு நடித்த "ராஜமுக்தி", பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்து தோல்வி அடைந்தது. "ராஜமுக்தி"யை படமாக்க முடிவு செய்த பாகவதர், அதன் படப்பிடிப்பை சென்னையில் நடத்த விரும்பவில்லை.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்த "நியூட்டோன்" ஸ்டூடியோவின் முக்கிய பங்குதாரர்களில் அவர் ஒருவர். அப்படி இருந்தும், அகில இந்திய புகழ் பெற்ற "பிரபாத்" ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த தீர்மானித்து புனா நகருக்கு சென்றார். படத்தில் பாகவதருக்கு ஜோடி வி.என். ஜானகி. பாகவதருக்கு அடுத்த முக்கிய வேடம் எம்.ஜி.ஆருக்கு.
"சுவர்க்க சீமா" தெலுங்குப்படத்தில், "ஓகோ... கோ... பாவுரமா" என்ற பாட்டைப்பாடி, மிகவும் புகழ் பெற்று விளங்கிய பானு மதியை, தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்திய படம் "ராஜமுக்தி"தான். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக _ ஆனால் வில்லி கேரக்டரில் அவர் நடித்தார்.
படத்தில் ஒரு முக்கிய மாற்றம். பாகவதருடன் இணைந்து பணியாற்றி வந்த இளங்கோவனும், ஜி.ராமநாதனும் இப்படத்தில் இல்லை. வசனத்தை பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதினார். இசை: சி.ஆர்.சுப்பராமன் (பிற்காலத்தில் "தேவதாஸ்" படத்துக்கு இசை அமைத்தவர்.) மிகப்பெரிய மாறுதல்:
தொடர்ந்து பாகவதர் படங்களில் நடித்து வந்த என்.எஸ்.கிருஷ்ணன் _ டி.ஏ.மதுரம் ஜோடி, இப்படத்தில் நடிக்கவில்லை. (பாகவதருக்கும், கிருஷ்ணனுக்கும் ஏதோ கருத்து வேற்றுமை என்று அப்போது பத்திரிகைகள் எழுதின.) கணீர் என்ற குரலில் "அசரீரி" பாடல்கள் பாடுவதில் புகழ் பெற்றவரும், "தென்னாட்டு சைகால்" என்று பட்டம் பெற்றவருமான பி.ஜி.வெங்கடேசன் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார்.
பாகவதரின் சிறை வாசத்தின்போது, நடிகர் _ நடிகைகளுக்கு பின்னணி பாடும் முறை வந்து விட்டது. பிரபல சங்கீத வித்வான் ஜி.என்.பாலசுப்பிரமணியத்திடம் இசை பயின்ற எம்.எல்.வசந்த குமாரி, வி.என்.ஜானகிக்கு குரல் கொடுத்தார். படத்தின் பெரும் பகுதிக்கு வசனம் எழுதி முடித்த தருணத்தில், புதுமைப்பித்தன் காச நோயினால் பாதிக்கப்பட்டார்.
அதனால், மனைவி வசித்த திருவனந்தபுரத்துக்குத் திரும்பிய அவர், சில நாட்களில் காலமானார். எனவே, மீதி வசனங்களை நாஞ்சில் ராஜப்பா எழுதி முடித்தார். இதற்கு முன்னால், பாகவதரின் பாடல்கள், படம் வந்து சில நாட்களுக்குப் பின்னரே இசைத்தட்டுகளாக வெளியிடப்பட்டு வந்தன.
"ராஜமுக்தி"யின் இசைத்தட்டுகள், படம் வருவதற்கு முன்பே வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்தன. பாகவதர் குரல் எப்போதும் போல் இனிமையாக ஒலித்தது மட்டுமல்ல, முன்பை விட மெரு கேறி இருந்தது.
பாகவதர் தனியாகப் பாடிய "உனையல்லால் ஒரு துரும்பும் அசையுமோ", "மானிட ஜென்மம்" ஆகிய பாடல்களும், எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைந்து பாடிய "இங்கும் அங்கும் எங்கும் இன்பமே" என்ற பாடலும் சூப்பர்ஹிட். பெரும் எதிர் பார்ப்புக்கு இடையே 9_10_1948 அன்று "ரிலீஸ்" ஆன "ராஜமுக்தி", அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
இதற்கு முன் வெளிவந்த பாகவதர் படங்களில் பாடல்கள் மட்டுமின்றி, கதை, வசனம், நடிப்பு, டைரக்ஷன், எடிட்டிங், ஒளிப்பதிவு முதலான சகல அம்சங்களும் சிறப்பாக அமைந்திருந்தன. "ராஜமுக்தி" எல்லா அம்சங்களிலும் பின்தங்கியிருந்தது. முக்கியமாக கதை நன்றாக இல்லை.
"போயும் போயும் இந்தக் கதைதானா கிடைத்தது" என்று ரசிகர்கள் எண்ணினார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவை இருந்தாலாவது படம் ஓரளவு தப்பித்திருக்கும். பாகவதரின் பாடல்கள் தவிர வேறு எதுவும் சிறப்பாக அமையாததால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
எனினும், சிறை மீண்ட பிறகு பாகவதர் நடித்த படத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் மக்களிடம் இருந்ததால், படம் 10, 15 வாரங்கள் ஓடியது. 110 வாரங்கள் ஓடிய "ஹரிதாஸ்" எங்கே? 10 வாரங்கள் ஓடிய "ராஜமுக்தி" எங்கே? படம் வெளி வருவதற்கு முன்பே விநியோகஸ்தர்கள் வாங்கிக் கொண்டு விட்டதால், பாகவதர் பொருளாதார ரீதியில் பாதிக்கப் படவில்லை.
திரைப்படத்துறையில் முதன் முதலாகத் தோல்வியை சந்தித்த பாகவதர் சோர்ந்து போனார். என்றாலும், துவண்டு போய்விட வில்லை. பிரபல ஆர்ட் டைரக்டரும், நியூடோன் ஸ்டூடியோவின் முக்கிய பங்குதாரருமான எப்.நாகூரின் டைரக்ஷனிலும் தயாரிப்பாலும் உருவான "அமரகவி"யில் நடித்தார். இதில் பாகவதருடன் டி.ஆர். ராஜகுமாரியும், பி.எஸ்.சரோஜாவும் இணைந்து நடித்தனர்.
"ராஜமுக்தி"யில் இடம் பெறாத என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் இதில் நடித்தனர். கே.ஏ.தங்கவேலு இந்தப்படத்தில் அறிமுகமானார். இசை அமைப்பை ஜி.ராமநாதன் கவனித்தார். "அமரகவி" மூலம்தான் கதை, வசன ஆசிரியராகவும், பாடல் ஆசிரியராகவும் கவிஞர் சுரதா அறிமுகமானார். பாகவதரின் பாடல்கள் நன்றாக இருந்தன.
படமும் நன்றாக இருந்தது. எனினும் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. பாகவதரின் அடுத்த படம் "சியாமளா". எஸ்.வரலட்சுமி கதாநாயகியாக நடித்த தெலுங்குப்படத்தில் கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டு, பாகவதரை நடிக்க வைத்தனர். இந்தப் படத்தில் பாகவதரின் மிகச்சிறந்த பாடலான "ராஜன் மகராஜன்" பாடல் இடம் பெற்றது.
மற்ற பாடல்களும் இனிமையாக ஒலித்தன. எனினும் ரேலங்கி கோஷ்டியின் நகைச்சுவைக் காட்சிகள் கோமாளித்தனமாகவும், அறுவையாகவும் இருந்ததால், படம் தோல்வி அடைந்தது. இந்த ஒரே ஒரு படத்தில் மட்டுமே பாகவதர் மீசையுடன் தோன்றினார். இந்த சமயத்தில், "அம்பிகாபதி" கதையை, பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன் மீண்டும் படமாக எடுத்தார்.
சிவாஜிகணேசன் அம்பிகாபதியாகவும், பானுமதி அமராவதியாகவும் நடித்தனர். ஏ.எல்.சீனிவாசனுக்கு ஒரு ஆசை. பழைய "அம்பிகாபதி"யில் அம்பிகாபதியாக நடித்த பாகவதரை இதில் கம்பராக (அதாவது சிவாஜியின் தந்தையாக) நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். பாகவதரை அணுகி, "சிவாஜிக்கு தரும் ஊதியத்தை விட 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாகத் தருகிறேன்.
கம்பராக நடிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். பாகவதர் யோசித்தார். "சிவாஜிகணேசனுக்கு தந்தையாக எந்தப் படத்தில் வேண்டுமானாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், அம்பிகாபதியாக முன்பு என்னைப் பார்த்த ரசிகர்கள், இப்போது கம்பராக ஏற்கமாட்டார்கள். உங்கள் அன்புக்கு நன்றி" என்று கூறி, கம்பராக நடிக்க பாகவதர் மறுத்துவிட்டார்.
இதேபோல், ஏவி.எம்.தயாரித்து மகத்தான வெற்றி பெற்ற "ஸ்ரீவள்ளி"யை, நரசு ஸ்டூடியோஸ் மீண்டும் தயாரித்தது. அதில் சிவாஜிகணேசன் முருகனாகவும், பத்மினி வள்ளியாகவும் நடித்தனர். இந்தப் படத்தில் நாரதராக நடிக்க பாகவதருக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பையும் ஏற்க மறுத்துவிட்டார். "பாக்கிய சக்கரம்" என்ற பெயரில் சொந்தப் படம் தயாரிக்க பாகவதர் ஏற்பாடு செய்தார்.
இதில் பாகவதருக்கு ஜோடியாக வசுந்தராதேவியும், இளம் ஜோடியாக சிவாஜிகணேசன் _ எம். என்.ராஜமும் நடிப்பார் கள் என்று விளம்பரம் வெளிவந்தது. ஆனால், அப்போது சிவாஜி கணேசன் பல படங்களில் நடித்து வந்ததால், `கால்ஷீட்' கிடைக்காமல் படம் கைவிடப்பட்டது. "பாக்கியசக்கர"த்துக்கு பதிலாக "புதுவாழ்வு" என்ற படத்தைத் தயாரித்தார், பாகவதர்.
இதில் அவருக்கு ஜோடி லலிதா (பத்மினியின் மூத்த சகோதரி) மாதுரிதேவி, டி.எஸ். பாலையா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர். முதன் முதலாக, டைரக்ஷன் பொறுப்பையும் பாகவதர் ஏற்றிருந்தார். பாகவதரின் சில பாடல்கள் இனிமையாக இருந்தன என்றாலும், கதை, தொழில் நுட்பம் எதுவும் சரியாக அமையாததால் படம் தோல்வி அடைந்தது.
"புதுவாழ்வு" படத்தில்... மீசையுடன் பாகவதர் தோன்றிய ஒரே படம் "சியாமளா" இதன் பின்னர், "முதலாளி", "சம்பூர்ண ராமாயணம்" முதலிய படங்களைத் தயாரித்த எம்.ஏ.வேணுவுடன் கூட்டு சேர்ந்து "சிவகாமி" என்ற படத்தை பாகவதர் தயாரித்தார். இது, "பாக்கியசக்கர"த்தின் கதைதான். பாகவதரின் ஜோடி ஜி.வரலட்சுமி.
தெலுங்கில் பிரபலமாக இருந்த ஜக்கையாவும், ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீயும் இளம் ஜோடியாக நடித்தனர். பாகவதர் சிறை செல்வதற்கு முன், "ராஜயோகி" உள்பட சில படங்களுக்காக நாலைந்து பாடல்கள் பதிவாகியிருந்தன. அந்தப் பாடல்கள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டன. மித்ரதாஸ் டைரக்ஷனில் படம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பாகவதரின் கண் பார்வை மங்கியது.
பார்வையைப் பெற அவர் வைத்தியர்களை நாடாமல், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கி, அம்மன் அருளை வேண்டினார். பார்வை ஓரளவு திரும்பியது. கச்சேரிகள் நடத்தலானார். 1959 அக்டோபரில் பொள்ளாச்சியில் கச்சேரி நடத்தியபின் அவரை ஒரு சாமியார் சந்தித்தார். "நீங்கள் பூரண குணம் அடைய ஒரு மருந்து தருகிறேன்" என்று கூறி, சுரைக்காய் கொடியில் கஷாயம் தயாரித்துக் கொடுத்தார்.
அதைக் குடித்துவிட்டு சேலம் திரும்பிய பாகவதரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை சென்னைக்கு காரில் அழைத்துச் சென்று, ஜெனரல் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் பலன் இல்லை. தமிழ்த் திரை உலகின் முதல் பொற்காலத்தை உருவாக்கிய பாகவதர், 1959 நவம்பர் 1_ந்தேதி மாலை காலமானார். ஒரு சகாப்தம் முடிவடைந்தது.
அவர் உடல் திருச்சிக்கு கொண்டு போகப்பட்டு, பெற்றோர் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. பாகவதர் மறைவுக்குப் பின் வெளிவந்த "சிவகாமி" சிறப்பாக இருந்தும் தலைமுறை இடைவெளி காரணமாக சுமாராகவே ஓடியது.

Followers

Please put vote