Subscribe:

interesting

சிறை வாசத்துக்குப்பின் பாகவதரின் `ராஜமுக்தி' அதிர்ச்சி தோல்வி


சிறை வாசத்துக்குப்பின் பாகவதரின் `ராஜமுக்தி' அதிர்ச்சி தோல்வி
"லடசுமி காந்தன்" கொலை வழக்கில் சிறை சென்ற பாகவதர், விடுதலையான பிறகு நடித்த "ராஜமுக்தி", பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்து தோல்வி அடைந்தது. "ராஜமுக்தி"யை படமாக்க முடிவு செய்த பாகவதர், அதன் படப்பிடிப்பை சென்னையில் நடத்த விரும்பவில்லை.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்த "நியூட்டோன்" ஸ்டூடியோவின் முக்கிய பங்குதாரர்களில் அவர் ஒருவர். அப்படி இருந்தும், அகில இந்திய புகழ் பெற்ற "பிரபாத்" ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த தீர்மானித்து புனா நகருக்கு சென்றார். படத்தில் பாகவதருக்கு ஜோடி வி.என். ஜானகி. பாகவதருக்கு அடுத்த முக்கிய வேடம் எம்.ஜி.ஆருக்கு.
"சுவர்க்க சீமா" தெலுங்குப்படத்தில், "ஓகோ... கோ... பாவுரமா" என்ற பாட்டைப்பாடி, மிகவும் புகழ் பெற்று விளங்கிய பானு மதியை, தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்திய படம் "ராஜமுக்தி"தான். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக _ ஆனால் வில்லி கேரக்டரில் அவர் நடித்தார்.
படத்தில் ஒரு முக்கிய மாற்றம். பாகவதருடன் இணைந்து பணியாற்றி வந்த இளங்கோவனும், ஜி.ராமநாதனும் இப்படத்தில் இல்லை. வசனத்தை பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதினார். இசை: சி.ஆர்.சுப்பராமன் (பிற்காலத்தில் "தேவதாஸ்" படத்துக்கு இசை அமைத்தவர்.) மிகப்பெரிய மாறுதல்:
தொடர்ந்து பாகவதர் படங்களில் நடித்து வந்த என்.எஸ்.கிருஷ்ணன் _ டி.ஏ.மதுரம் ஜோடி, இப்படத்தில் நடிக்கவில்லை. (பாகவதருக்கும், கிருஷ்ணனுக்கும் ஏதோ கருத்து வேற்றுமை என்று அப்போது பத்திரிகைகள் எழுதின.) கணீர் என்ற குரலில் "அசரீரி" பாடல்கள் பாடுவதில் புகழ் பெற்றவரும், "தென்னாட்டு சைகால்" என்று பட்டம் பெற்றவருமான பி.ஜி.வெங்கடேசன் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார்.
பாகவதரின் சிறை வாசத்தின்போது, நடிகர் _ நடிகைகளுக்கு பின்னணி பாடும் முறை வந்து விட்டது. பிரபல சங்கீத வித்வான் ஜி.என்.பாலசுப்பிரமணியத்திடம் இசை பயின்ற எம்.எல்.வசந்த குமாரி, வி.என்.ஜானகிக்கு குரல் கொடுத்தார். படத்தின் பெரும் பகுதிக்கு வசனம் எழுதி முடித்த தருணத்தில், புதுமைப்பித்தன் காச நோயினால் பாதிக்கப்பட்டார்.
அதனால், மனைவி வசித்த திருவனந்தபுரத்துக்குத் திரும்பிய அவர், சில நாட்களில் காலமானார். எனவே, மீதி வசனங்களை நாஞ்சில் ராஜப்பா எழுதி முடித்தார். இதற்கு முன்னால், பாகவதரின் பாடல்கள், படம் வந்து சில நாட்களுக்குப் பின்னரே இசைத்தட்டுகளாக வெளியிடப்பட்டு வந்தன.
"ராஜமுக்தி"யின் இசைத்தட்டுகள், படம் வருவதற்கு முன்பே வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்தன. பாகவதர் குரல் எப்போதும் போல் இனிமையாக ஒலித்தது மட்டுமல்ல, முன்பை விட மெரு கேறி இருந்தது.
பாகவதர் தனியாகப் பாடிய "உனையல்லால் ஒரு துரும்பும் அசையுமோ", "மானிட ஜென்மம்" ஆகிய பாடல்களும், எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைந்து பாடிய "இங்கும் அங்கும் எங்கும் இன்பமே" என்ற பாடலும் சூப்பர்ஹிட். பெரும் எதிர் பார்ப்புக்கு இடையே 9_10_1948 அன்று "ரிலீஸ்" ஆன "ராஜமுக்தி", அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
இதற்கு முன் வெளிவந்த பாகவதர் படங்களில் பாடல்கள் மட்டுமின்றி, கதை, வசனம், நடிப்பு, டைரக்ஷன், எடிட்டிங், ஒளிப்பதிவு முதலான சகல அம்சங்களும் சிறப்பாக அமைந்திருந்தன. "ராஜமுக்தி" எல்லா அம்சங்களிலும் பின்தங்கியிருந்தது. முக்கியமாக கதை நன்றாக இல்லை.
"போயும் போயும் இந்தக் கதைதானா கிடைத்தது" என்று ரசிகர்கள் எண்ணினார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவை இருந்தாலாவது படம் ஓரளவு தப்பித்திருக்கும். பாகவதரின் பாடல்கள் தவிர வேறு எதுவும் சிறப்பாக அமையாததால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
எனினும், சிறை மீண்ட பிறகு பாகவதர் நடித்த படத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் மக்களிடம் இருந்ததால், படம் 10, 15 வாரங்கள் ஓடியது. 110 வாரங்கள் ஓடிய "ஹரிதாஸ்" எங்கே? 10 வாரங்கள் ஓடிய "ராஜமுக்தி" எங்கே? படம் வெளி வருவதற்கு முன்பே விநியோகஸ்தர்கள் வாங்கிக் கொண்டு விட்டதால், பாகவதர் பொருளாதார ரீதியில் பாதிக்கப் படவில்லை.
திரைப்படத்துறையில் முதன் முதலாகத் தோல்வியை சந்தித்த பாகவதர் சோர்ந்து போனார். என்றாலும், துவண்டு போய்விட வில்லை. பிரபல ஆர்ட் டைரக்டரும், நியூடோன் ஸ்டூடியோவின் முக்கிய பங்குதாரருமான எப்.நாகூரின் டைரக்ஷனிலும் தயாரிப்பாலும் உருவான "அமரகவி"யில் நடித்தார். இதில் பாகவதருடன் டி.ஆர். ராஜகுமாரியும், பி.எஸ்.சரோஜாவும் இணைந்து நடித்தனர்.
"ராஜமுக்தி"யில் இடம் பெறாத என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் இதில் நடித்தனர். கே.ஏ.தங்கவேலு இந்தப்படத்தில் அறிமுகமானார். இசை அமைப்பை ஜி.ராமநாதன் கவனித்தார். "அமரகவி" மூலம்தான் கதை, வசன ஆசிரியராகவும், பாடல் ஆசிரியராகவும் கவிஞர் சுரதா அறிமுகமானார். பாகவதரின் பாடல்கள் நன்றாக இருந்தன.
படமும் நன்றாக இருந்தது. எனினும் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. பாகவதரின் அடுத்த படம் "சியாமளா". எஸ்.வரலட்சுமி கதாநாயகியாக நடித்த தெலுங்குப்படத்தில் கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டு, பாகவதரை நடிக்க வைத்தனர். இந்தப் படத்தில் பாகவதரின் மிகச்சிறந்த பாடலான "ராஜன் மகராஜன்" பாடல் இடம் பெற்றது.
மற்ற பாடல்களும் இனிமையாக ஒலித்தன. எனினும் ரேலங்கி கோஷ்டியின் நகைச்சுவைக் காட்சிகள் கோமாளித்தனமாகவும், அறுவையாகவும் இருந்ததால், படம் தோல்வி அடைந்தது. இந்த ஒரே ஒரு படத்தில் மட்டுமே பாகவதர் மீசையுடன் தோன்றினார். இந்த சமயத்தில், "அம்பிகாபதி" கதையை, பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன் மீண்டும் படமாக எடுத்தார்.
சிவாஜிகணேசன் அம்பிகாபதியாகவும், பானுமதி அமராவதியாகவும் நடித்தனர். ஏ.எல்.சீனிவாசனுக்கு ஒரு ஆசை. பழைய "அம்பிகாபதி"யில் அம்பிகாபதியாக நடித்த பாகவதரை இதில் கம்பராக (அதாவது சிவாஜியின் தந்தையாக) நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். பாகவதரை அணுகி, "சிவாஜிக்கு தரும் ஊதியத்தை விட 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாகத் தருகிறேன்.
கம்பராக நடிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். பாகவதர் யோசித்தார். "சிவாஜிகணேசனுக்கு தந்தையாக எந்தப் படத்தில் வேண்டுமானாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், அம்பிகாபதியாக முன்பு என்னைப் பார்த்த ரசிகர்கள், இப்போது கம்பராக ஏற்கமாட்டார்கள். உங்கள் அன்புக்கு நன்றி" என்று கூறி, கம்பராக நடிக்க பாகவதர் மறுத்துவிட்டார்.
இதேபோல், ஏவி.எம்.தயாரித்து மகத்தான வெற்றி பெற்ற "ஸ்ரீவள்ளி"யை, நரசு ஸ்டூடியோஸ் மீண்டும் தயாரித்தது. அதில் சிவாஜிகணேசன் முருகனாகவும், பத்மினி வள்ளியாகவும் நடித்தனர். இந்தப் படத்தில் நாரதராக நடிக்க பாகவதருக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பையும் ஏற்க மறுத்துவிட்டார். "பாக்கிய சக்கரம்" என்ற பெயரில் சொந்தப் படம் தயாரிக்க பாகவதர் ஏற்பாடு செய்தார்.
இதில் பாகவதருக்கு ஜோடியாக வசுந்தராதேவியும், இளம் ஜோடியாக சிவாஜிகணேசன் _ எம். என்.ராஜமும் நடிப்பார் கள் என்று விளம்பரம் வெளிவந்தது. ஆனால், அப்போது சிவாஜி கணேசன் பல படங்களில் நடித்து வந்ததால், `கால்ஷீட்' கிடைக்காமல் படம் கைவிடப்பட்டது. "பாக்கியசக்கர"த்துக்கு பதிலாக "புதுவாழ்வு" என்ற படத்தைத் தயாரித்தார், பாகவதர்.
இதில் அவருக்கு ஜோடி லலிதா (பத்மினியின் மூத்த சகோதரி) மாதுரிதேவி, டி.எஸ். பாலையா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர். முதன் முதலாக, டைரக்ஷன் பொறுப்பையும் பாகவதர் ஏற்றிருந்தார். பாகவதரின் சில பாடல்கள் இனிமையாக இருந்தன என்றாலும், கதை, தொழில் நுட்பம் எதுவும் சரியாக அமையாததால் படம் தோல்வி அடைந்தது.
"புதுவாழ்வு" படத்தில்... மீசையுடன் பாகவதர் தோன்றிய ஒரே படம் "சியாமளா" இதன் பின்னர், "முதலாளி", "சம்பூர்ண ராமாயணம்" முதலிய படங்களைத் தயாரித்த எம்.ஏ.வேணுவுடன் கூட்டு சேர்ந்து "சிவகாமி" என்ற படத்தை பாகவதர் தயாரித்தார். இது, "பாக்கியசக்கர"த்தின் கதைதான். பாகவதரின் ஜோடி ஜி.வரலட்சுமி.
தெலுங்கில் பிரபலமாக இருந்த ஜக்கையாவும், ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீயும் இளம் ஜோடியாக நடித்தனர். பாகவதர் சிறை செல்வதற்கு முன், "ராஜயோகி" உள்பட சில படங்களுக்காக நாலைந்து பாடல்கள் பதிவாகியிருந்தன. அந்தப் பாடல்கள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டன. மித்ரதாஸ் டைரக்ஷனில் படம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பாகவதரின் கண் பார்வை மங்கியது.
பார்வையைப் பெற அவர் வைத்தியர்களை நாடாமல், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கி, அம்மன் அருளை வேண்டினார். பார்வை ஓரளவு திரும்பியது. கச்சேரிகள் நடத்தலானார். 1959 அக்டோபரில் பொள்ளாச்சியில் கச்சேரி நடத்தியபின் அவரை ஒரு சாமியார் சந்தித்தார். "நீங்கள் பூரண குணம் அடைய ஒரு மருந்து தருகிறேன்" என்று கூறி, சுரைக்காய் கொடியில் கஷாயம் தயாரித்துக் கொடுத்தார்.
அதைக் குடித்துவிட்டு சேலம் திரும்பிய பாகவதரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை சென்னைக்கு காரில் அழைத்துச் சென்று, ஜெனரல் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் பலன் இல்லை. தமிழ்த் திரை உலகின் முதல் பொற்காலத்தை உருவாக்கிய பாகவதர், 1959 நவம்பர் 1_ந்தேதி மாலை காலமானார். ஒரு சகாப்தம் முடிவடைந்தது.
அவர் உடல் திருச்சிக்கு கொண்டு போகப்பட்டு, பெற்றோர் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. பாகவதர் மறைவுக்குப் பின் வெளிவந்த "சிவகாமி" சிறப்பாக இருந்தும் தலைமுறை இடைவெளி காரணமாக சுமாராகவே ஓடியது.

No comments:

Post a Comment

Followers

Please put vote