Subscribe:

interesting

உழைப்பு... மன உறுதி... நம்பிக்கை


ரக்ஷா பந்தன் விழா என்பதால் எனது கார் டிரைவருக்கு விடுப்பு அளித்துவிட்டேன். மற்றவர்கள் இன்றைய தினத்தில் மகிழ்வாக இருக்கும்போது எனது கார் டிரைவரை மட்டும் நான் ஏன் சிரமப்படுத்த வேண்டும்?'' என்று யதார்த்த உணர்வுடன் கூறுகிறார் அத்தொழிலதிபர். அவரது தொழிலின் வெற்றி ரகசியம் புரிந்தது.
சென்னை அருகே உள்ள தாம்பரத்தைச் சேர்ந்த அந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர்தான் வி.சந்திரசேகர். மிகவும் துடிப்பான, சுறுசுறுப்பான இளைஞரான அவர், ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
ரூபாய் 1 லட்சம் முதலீட்டில் "தாரிணி இண்டர்நேஷனல்' எனும் நிறுவனத்தைத் தொடங்கி, 15 ஆண்டுகளில் ரூ.350 கோடி சொத்து மதிப்புடைய நிறுவனமாக உயர்த்தியுள்ளார். இதெல்லாம் குறுகிய காலத்தில் எப்படி சாத்தியமாயிற்று? இதோ அவரே கூறுகிறார்.
""சென்னையில் உள்ள தாம்பரம்தான் நான் பிறந்த இடம். எனது தந்தை ஆஞ்சநேயலு, ஆந்திரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். விமானப் படையில் முதுநிலை வாரண்ட் ஆபிஸராகப் பணியாற்றியவர். குடும்பத்தில் நான் உள்பட 6 சகோதரர்கள், ஒரு சகோதரி. தாயார் ராஜேஸ்வரி. தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். எம்.எஸ்சி. படித்தவர்.
எனது பள்ளிப் படிப்பை சென்னையிலும் மெக்கானிக்கல் என்ஜீனியர் படிப்பை கான்பூர் ஆர்.இ.சி. கல்லூரியிலும் முடித்தேன்.
அப்போது என்ஜினீயர் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் செலவானது. எனது தந்தையார் தனது செலவைச் சுருக்கி எனது படிப்புக்குப் பணம் அனுப்பினார்.
கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மேற்கொண்டு படிக்க நான் விரும்பியபோது அதற்கான செலவை ஈடுகட்ட தந்தையால் முடியவில்லை. இதனால், நுழைவுத் தேர்வை எழுதி ஸ்காலர்ஷிப்பில் தில்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தேன்.
முதுகலைப் படிப்புக்குப் பிறகு 1991-ம் ஆண்டில் வளாகத் தேர்வின் மூலம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மின் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். அங்கு பணியின்போது கிடைத்த அனுபவமே தொழில் தொடங்க வேண்டும் என்ற வேட்கையை என்னுள் ஏற்படுத்தியது. மின் உற்பத்தி, அதற்கான வடிவமைப்பு, பகிர்மானம், மின் விநியோகம் உள்ளிட்ட பல விஷயங்களில் அனுபவ அறிவைப் பெற்றேன்.
ரூபாய் 1 லட்சம் சம்பளம் பெற்ற அந்த வேலையை உதறிவிட்டு இந்தியா திரும்பினேன்.
வீட்டில் எனது தந்தைக்கும், எனக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. என் மீதுள்ள அக்கறையில் எப்படியாவது நான் ஒரு வேலையில் சேரவேண்டும் என்று வற்புறுத்தினார்.
தாயார் ராஜேஸ்வரி மறைமுகமாக ஊக்கம் அளித்தார். தந்தைக்குத் தெரியாமல் தனது நகைகளை விற்றும், வீட்டை அடமானம் வைத்தும் ரூபாய் 1 லட்சம் கொடுத்தார். அதுதான் எனது வெற்றியின் முதல்படி. அந்தப் பணத்துடன் வீட்டைவிட்டு தில்லி வந்தேன்.
அமர் காலனியில் ஒரு சிறிய அலுவலகம் அமைத்தேன். சிறிய அறையில் செயல்பட்ட அந்த அலுவலகத்தில், எனது தந்தை தில்லியில் பணியாற்றிய காலத்தில் அவர் பயன்படுத்திய பழைய மேஜையும், இரு நாற்காலிகளும் அலுவலகத்தை நிறைத்தன. அந்த மேஜையைப் பார்க்கும்போதெல்லாம் தந்தை அதில் அமர்ந்து என்னைக் கண்காணிப்பதாகவே நினைத்துக் கொள்வேன்.
தாரிணி இண்டர்நேஷனல் எனும் பெயரில் நிறுவனம் தொடங்கி நீர் மின் உற்பத்திக்கான டிûஸன் ஆலோசனை வழங்கும் என்ஜினீயரிங் கன்சல்டன்ஸி பணியை அளித்தோம். எனது நிறுவனத்தில் அப்போது நானே முதலாளி, நானே தொழிலாளி.
ஆரம்பத்தில் ஓராண்டுக்கு பெரிய அளவில் "ஆர்டர்' ஏதும் கிடைக்கவில்லை. அதற்காக நான் வருத்தப்படவோ, மனம் குழம்பவோ இல்லை. நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.
முதல்முதலாக, நீர் மின் திட்டத்திற்கான வடிவமைப்பை அளிக்கும் திட்டத்துக்கான ரூபாய் 8 லட்சம் பெறுமான ஆர்டர் இமாச்சலப் பிரதேச அரசிடமிருந்து கிடைத்தது. அப்பணியைத் திறம்பட முடித்துத் தந்தேன். தனியார் நிறுவனங்கள் பல எங்கள் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் தர முன்வந்தன. தனியார் நிறுவனங்களும் மின் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு அப்போது அரசு அனுமதி அளித்த காலம் அது.
நீர் மின் திட்டங்களுக்கான டிûஸன் ஆலோசனையை நல்ல முறையில் அளித்ததால், பல தனியார் நிறுவனங்களின் ஆர்டர்கள் எங்களைத் தேடி வந்தன. அதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்தது. அத்தொகையை நீர் மின் உற்பத்தித் திட்டங்களில் முதலீடு செய்தோம்.
தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா, ஜிம்பாப்வே, கானா உள்ளிட்ட பல வெளி நாடுகளிலும் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் மின் பகிர்மானம் மற்றும் மின் விநியோகத் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்த அடிப்படையில் பணிகள் செய்து தந்தோம். இதற்காக பல நாடுகளுக்குச் சென்று வருகிறேன்.
தில்லி தவிர, சென்னை, பெங்களூரூ, ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் எங்கள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது பொறியாளர்கள், களப் பணியாளர்கள் ஆகிய திறன்மிகு பணியாளர்கள் உள்பட சுமார் 400 பேர் வேலை செய்கின்றனர்.
தாரிணி இண்டர்நேஷனல் நிறுவனம் தற்போது ஈக்விட்டி பங்குதாரர்கள் பங்களிப்புடன் தாரிணி குழும நிறுவனமாக வளர்ந்துள்ளது. நிறுவனத்தின் சொத்து
மதிப்பு ரூபாய் 350 கோடியாகும். ஆண்டுக்கு ரூபாய் 180 கோடிக்கு மேல் நிறுவனத்தின் விற்றுமுதல் உள்ளது.
மகாராஷ்டிராவில் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் சர்க்கரை ஆலையை அமைத்து வருகிறோம். சமூகப் பணியாக சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டித் தந்துள்ளோம். வனவிலங்கு பாதுகாப்புக்கும் உதவி வருகிறோம்.
இந்தியாவில் மின் உற்பத்தியானது தேவைக்கு ஏற்ப இல்லை. உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி 10 ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும். இதுபோன்ற சூழலில் நீர் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பு உள்ளது.
எங்களிடம் தேவையான ஆர்டர்கள் இருந்து வருவதால் அடுத்த 5, 6 ஆண்டுகளில் எங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்பை ரூபாய் 1000 கோடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.
தற்போது, இந்திய அளவில் தனியார் நீர் மின் உற்பத்தி நிறுவனங்களில் 5-வது பெரிய நிறுவனமாக எங்கள் நிறுவனம் விளங்குகிறது. சிறந்த நிறுவனத்திற்கான பல விருதுகளையும் பெற்றுள்ளோம்.
நான் சென்னையில் இருந்து தில்லிக்கு 1993-ல் ஆண்டில் வந்தபோது ஏதும் கொண்டு வரவில்லை. உழைப்பையும் மனஉறுதியையும் நம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டிருந்தேன். அதுதான் இந்த உயரத்திற்கு என்னை அழைத்துச் சென்றுள்ளது.
ஜாம்பியா நாட்டில் ஆதிவாசிகள் வசிக்கும் காட்டுப் பகுதியில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பகிர்மானப் பணிக்காக உள்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ள எங்கள் நிறுவனத்திற்கு ஆர்டர் தந்திருந்தனர். இப்பணியை மேற்கொள்ள அங்குள்ள பழங்குடி மக்களிடம் மிகுந்த எதிர்ப்பு இருந்தது.
அவர்களிடம் பேசி அவர்களுடைய தேவையை அந்நாட்டு அரசிடம் எடுத்துக்கூறி சுமூகத் தீர்வு காண உதவினேன். இதையடுத்து, அந்தத் திட்டத்தை நாங்கள் சிறப்பாக முடித்தோம். அம்மக்கள் என்னை "ஷகா' என்று அழைப்பர். பிறகுதான் தெரிந்தது, "ஷகா' என்றால் "ஆசியப் புலி' என்று அர்த்தமாம்!

No comments:

Post a Comment

Followers

Please put vote