டைரக்டர் கே.சுப்பிரமணியம் டைரக்ட் செய்த "பவளக் கொடி", "நவீன சாரங்கதரா" ஆகிய படங்களில் நடித்த எம்.கே. தியாகராஜபாகவதர், "திருச்சி தியாகராஜா பிலிம்ஸ்" என்ற படக் கம்பெனியைத் தொடங்கி "சத்தியசீலன்" என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.
இந்தப்படம் பம்பாயில் தயாரிக்கப்பட்டது. சம்பத்குமார் என்பவர் டைரக்ட் செய்தார். பாகவதரின் ஜோடி தேவசேனா. (பிற்காலத்தில் எம்.எம்.தண்டபாணி தேசிகரை மணந்தவர்) இந்தக் காலக்கட்டத்தில், ஸ்டண்ட் படங்கள் வரத்தொடங்கியிருந்தன.
எனவே, "சத்யசீலன்" படத்தில் சில ஸ்டண்ட் காட்சிகளிலும் பாகவதர் நடித்தார். முந்தியப் படங்களைப் போல இது சூப்பர்ஹிட் படம் இல்லை யென்றாலும், வெற்றிப் படம்தான். இந்தப் படத்துக்கு ஆன மொத்த செலவே ரூ.52 ஆயிரம்! நாடகத்தில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த ஜி.ராமநாதன், இந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார்.
இந்தப் படத்தில் ஒரு புதுமை. மன்னர் வேடத்தில் நடித்த பாகவதர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். எதிரே வழக்கமான பட்டு சட்டை, பட்டு வேட்டி அணிந்து, பக்கவாத்தியங்கள் புடை சூழ, பாகவதர் கச்சேரி நடத்துவார்! புதுமையான இரட்டை வேடம்! கச்சேரியில் அவர் பாடியது, காந்தீயக் கொள்கைகளைப் புகழும்" சொல்லுப் பாப்பா" என்ற பாடல்! 1937_ம் ஆண்டு பாகவதர் வாழ்க்கையில் முக்கியமானது.
அந்த ஆண்டு பாகவதர் நடித்த "சிந்தாமணி", "அம்பிகாபதி" ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்து இரண்டு படங்களுமே மெகா சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. இரண்டு படங்களுமே ஒரு வருடத்துக்கு மேல் ஓடின. சிந்தாமணி, மதுரை ராயல் டாக்கீஸ் தயாரிப்பு. படத்தில், பாகவதருக்கு ஜோடி அஸ்வத்தம்மா.
கன்னடத்தில் பிரபல பாடகியான இவர், தமிழில் பிரமாதமாகப் பாடி நடித்தார். படத்தை ஒய்.வி.ராவ் (நடிகை லட்சுமியின் தந்தை) டைரக்ட் செய்தார். "சிந்தாமணி" மூலம் கிடைத்த லாபத்தைக்கொண்டு, மதுரையில் "சிந்தாமணி" என்ற பெயரில் ஒரு தியேட்டரையே கட்டினார்கள் ராயல் டாக்கீசார்!
அந்த அளவுக்கு வசூல் மழை! இந்தப் படத்தில், "மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை", "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி", "ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே" முதலான பாடல்கள் பிரமாதமாக அமைந்தன.
"சிந்தாமணி" படத்தின் மாபெரும் வெற்றியைக் கண்ட இசைத் தட்டு தயாரிப்பாளர்கள், உடனடியாக அந்த இசைத்தட்டுகளை வெளியிட்டு பணம் பார்த்து விட எண்ணினார்கள். ஆனால், இசைத்தட்டு வெளிவந்தால், சினிமா பட வசூல் பாதிக்கப்படுமோ என்று எண்ணிய பாகவதர், இசைத் தட்டுக்காக பாட மறுத்து விட்டார்.
(இப்போதெல்லாம், திரைப்படத்துக்காக பதிவு செய்யப்பட்ட பாடலை அப்படியே "கேசட்"டாகவோ, "சிடி"யாகவோ மாற்றி வெளியிட முடிகிறது. அக்காலத்து இசைத்தட்டு, 3 நிமிட நேரம் பாடக்கூடியது. எனவே, அதற்கு ஏற்றபடி மீண்டும் பாடகர்களை பாட வைத்து இசைத் தட்டுக்கென்று புதிதாகப் பதிவு செய்வார்கள்.
வாத்தியங்களின் இசை சேர்ப்பால், படங்களில் உள்ளதைவிட, இசைத் தட்டுப் பாடல்கள் சிறப்பாக _ கூடுதல் மெருகுடன் அமைவது உண்டு) இசைத்தட்டு தயாரிப்பாளர்கள், அஸ்வத்தம்மா தனியாகப் பாடிய "கிருஷ்ணா கிருஷ்ணா", "ஈனஜென்மம் எடுத்தேன்" முதலான பாடல்களை இசைத் தட்டுகளாக வெளியிட்டார்கள்.
பாகவதருடன் அஸ்வத்தம்மா சேர்ந்து பாடிய "மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை" என்ற டூயட் பாட்டு மிகப்பிரபலம். அதையும் இசைத்தட்டில் வெளியிட விரும்பிய இசைத்தட்டு கம்பெனியார், ஒரு தந்திரம் செய்தனர்.
கிட்டத்தட்ட பாகவதர் போன்ற குரலைக் கொண்ட துறைžர் ராஜகோபால் சர்மா என்ற சங்கீத வித்வானைப் பாட வைத்து, அந்தப் பாடலை வெளியிட்டார்கள். "சிந்தாமணி படப்பாடல்" என்று மட்டுமே இசைத்தட்டில் குறிப்பிடப்பட்டது.
பாடியது யார் என்று குறிப்பிடப்படவில்லை. இசைத்தட்டைக் கேட்ட பலருக்கு, "இது பாகவதர் குரல் அல்ல; டூப்ளிகேட்" என்பது புரிந்து விட்டது. இசைத்தட்டு கம்பெனிக்கு கண்டன கடிதங்கள் பறந்தன. இதன் காரணமாக, இசைத்தட்டுக்காரர்கள் பாகவதரிடம் சென்று, சமரசம் பேசினார்கள்.
"இசைத் தட்டுக்கள் வெளிவந்த பிறகும், சிந்தாமணி வசூல் குறையவில்லை, நீங்கள் பாடிய பாடல்களை இசைத் தட்டுகளாக வெளியிட சம்மதியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்கள். இசைத் தட்டினால், படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை என்பதை, பாகவதரும் உணர்ந்திருந்தார். எனவே, அவர் பாடிய பாடல்களை வெளியிட சம்மதித்தார்.
பாகவதரின் பாடல்கள இசைத்தட்டுகளாக வெளிவந்து, விற்பனையில் வரலாறு படைத்தன. "மாயப்பிரபஞ்சத்தில்..." டூயட் பாடலை (முன்பு துறைžர் ராஜகோபால சர்மா பாடியது) மீண்டும் பாகவதர் குரலில் பதிவு செய்து வெளியிட இசைத்தட்டு கம்பெனி விரும்பியும், பாகவதர் சம்மதிக்கவில்லை. "ஏற்கனவே அந்த இசைத்தட்டு வெளிவந்து விட்டது.
மீண்டும் எதற்காக புதிய இசைத்தட்டு?" என்று கூறிவிட்டார். நல்ல தமிழ் வசனங்களுக்கு முன்னோடியான இளங்கோவன் முதன் முதலாக வசனம் எழுதிய படம் "அம்பிகாபதி". இதற்கு முன் வெளிவந்த பெரும்பாலான படங்களில் சமஸ்கிருத வார்த்தைகள் மிகுதியாகக் கலந்த "மணிப் பிரவாள" நடையில் எழுதப்பட்ட வசனம் தான் இடம் பெற்று இருந்தது.
"நல்ல தமிழில் அற்புதமாக வசனம் ஒலித்த முதல் படம் அம்பிகாபதி தான்" என்று பிற்காலத்தில் பிரபல வசனகர்த்தா ஏ.எல். நாராயணன் கூறியுள்ளார். இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பு: அமெரிக்க டைரக்டரான எல்லிஸ் ஆர்.டங்கன்தான் இந்தப் படத்தை டைரக்ட் செய்தார்.
தமிழ் இலக்கியமான அம்பிகாபதியின் கதையை, உதவியாளர்கள் மூலமாக நன்றாக உணர்ந்து கொண்டு, ஒரு காவியமாக அதை உருவாக்கினார். பாகவதர் _ சந்தானலட்சுமி காதல் காட்சிகள், இதற்கு முன் கண்டிராத வகையில் நெருக்கமாக அமைந்திருந்தன.
மேல் நாட்டில் அப்போது தயாரிக்கப்பட்ட "ரோமியோ ஜுலியட்" படத்துக்கு இணையாகத் தயாரிக்கப்பட்ட "அம்பிகா பதி", பெரும்பாலான ஊர்களில் ஓர் ஆண்டுக்கு மேல் ஓடியது. ஒரே ஆண்டில் இரண்டு மெகா சூப்பர் ஹிட் படங்களை தந்த பாகவதர், மீண்டும் சொந்தப் படத் தயாரிப்பில் இறங்கினார்.
1939_ல் அவர் தயாரித்த "திருநீலகண்டர்" படம், பாடல், நடிப்பு, தொழில் நுட்பம் முதலான சகல அம்சங்களிலும் முந்திய படங்களை மிஞ்சக்கூடிய வெற்றிப்படமாக அமைந்தது.
இதில் பாகவதரின் பாடல்கள் மட்டுமல்ல, நடிப்பும் அற்புதமாக இருந்தது. படத்தை டைரக்ட் செய்தவர் ராஜா சாண்டோ. தமிழரான இவர், பம்பாயில் ஊமைப்பட காலத்தில் இருந்து நடிகராகவும், டைரக்டராகவும் புகழ் பெற்று விளங்கியவர்.
சரியாக நடிக்காவிட்டால், நடிகர்_நடிகைகளை அடித்து விடுவார்! "திருநீலகண்டர்" படத்தில், பாகவதரை சாமியார் வேடம் தாங்கிய செருகளத்தூர் சாமா எட்டி உதைக்கும் கட்டம் ஒன்று உண்டு. சாமா தயங்கினார்.
"நீ எட்டி உதைக்கிறாயா? அல்லது நான் உன்னை உதைக்கட்டுமா?" என்று சாமாவிடம் கோபமாகக் கூறினார், ராஜா சாண்டோ. பாகவதரும் சாமாவைப் பார்த்து, "வெறும் நடிப்புதானே! பரவாயில்லை, எட்டி உதையுங்கள்" என்று கூறினார். பாகவதரிடம் மன்னிப்பு கேட்டபடி எட்டி உதைத்தார், சாமா.
காட்சி இயற்கையாக அமைந்தது! "தீன கருணா கருணே", "சிதம்பர நாதா", "சராசரங்கள்", "ஒரு நாள் ஒரு பொழுது" முதலான பாகவதரின் அனைத்துப் பாடல்களும் "ஹிட்" ஆயின. அந்த ஆண்டு ரசிகர்கள் இடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சிறந்த படமாக "திருநீல கண்ட"ரையும், சிறந்த நடிகராக பாகவதரையும் ரசிகர்கள் தேர்ந்தெடுத்தனர்.
இந்தப் படத்தில், பாகவதருக்கு ஜோடியாக திருநெல்வேலி பாப்பா நடித்தார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் _ டி.ஏ.மதுரம் நகைச்சுவை, படத்திற்கு மேலும் சிறப்பளித்தது. என்.எஸ்.கிருஷ்ணனும், டி.எஸ்.துரைராஜ×ம் பங்கு கொண்ட "எரிந்த கட்சி _ எரியாத கட்சி" லாவணி பாடல் மிகவும் புகழ் பெற்றது.
திருநீலகண்டரைத் தொடர்ந்து, பாகவதரிடம் கால்ஷீட் கேட்டு எந்த பட அதிபர் சென்றாலும், "வசனத்துக்கு இளங்கோவனையும், பாடலுக்கு பாபநாசம் சிவனையும் ஒப்பந்தம் செய்து விட்டு வாருங்கள். அதன்பின் கால்ஷீட் தருகிறேன் என்று கூறிவிடுவார். அந்த அளவுக்கு பாகவதர் _ இளங்கோவன் _ பாபநாசம் சிவன் கூட்டணி "வெற்றிக்கூட்டணி"யாக விளங்கியது.
"திருநீலகண்டர்" படத்தை அடுத்து பாகவதர் நடித்த படம் "ëஅசோக்குமார்". தெலுங்கில் பிரபல நட்சத்திரங்களாக விளங்கிய நாகய்யாவும், கண்ணாம்பாவும் இந்தப் படத்தின் மூலம்தான் தமிழில் அறிமுகமானார்கள். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் இருவரும், நல்ல தமிழில் பேசி நடித்தனர்.
இந்தப் படத்துக்கு இன்னொரு சிறப்பு உண்டு. இதற்கு முன் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., இந்தப் படத்தில் முக்கிய வேடம் தாங்கி, பாகவதரின் தோழராக நடித்தார். பாகவதரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்து தோன்றிய 15 நிமிடங்கள் உணர்ச்சி மயமானது.
"பட உலகின் பார்வையை என் பக்கம் திரும்ப வைத்தது அசோக்குமார் படம்தான்" என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை ராஜா சந்திரசேகர் (டைரக்டர் டி.ஆர்.ரகுநாத்தின் அண்ணன்) டைரக்ட் செய்தார். வசனம் இளங்கோவன்;
பாடல்கள் பாபநாசம் சிவன். பாகவதர் பாடிய "பூமியில் மானிட", "உன்னைக்கண்டு மயங்காத", "சத்வகுணபோதன்", "தியானமே" முதலான எல்லா பாடல்களுமே சிறப்பாக அமைந்தன. இந்தப் படமும் திருநீல கண்டருக்கு இணையான வெற்றியைப் பெற்றது. அசோக்குமாரை அடுத்து பாகவதர் நடித்த படம் "சிவகவி".
இது மெகா ஹிட் படம் மட்டுமல்ல, மகத்தான திரைக் காவியம். பாகவதர் அதுவரை நடித்த படங்களில் தலை சிறந்தது. கோவை பட்சி ராஜா ஸ்டூடியோ தயாரித்த இந்தப் படத்தை முதலில் டைரக்ட் செய்தவர் ராஜா சாண்டோ.
தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடுவுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அவர் விலகிக்கொண்ட தால், ஸ்ரீராமுலு நாயுடுவே டைரக்ட் செய்தார். திரைக்கதையை அருமையாக அமைத்து, அற்புதமாக வசனம் எழுதியிருந்தார், இளங்கோவன். பாகவதருக்கு ஜோடியாக நடித்தவர் எஸ்.ஜெயலட்சுமி. "வீணை" எஸ்.பாலசந்தரின் மூத்த சகோதரி.
டி.ஆர்.ராஜகுமாரி முதன் முதலாக பாகவதர் படத்தில் இடம் பெற்றார். வில்லி வேடத்தில், ராஜ நர்த்தகியாக அவர் நடித்தார். மற்றும் செருகளத்தூர் சாமா, டி.பாலசுப்பிரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்தின் பின்பகுதியில் வேடன் _ வேலன் _ விருத்தனாக நடித்தவர் எஸ்.ராஜம். ("வீணை" பாலசந்தரின் அண்ணன்.) "வதனமே சந்திர பிம்பமோ", "மனம் கனிந்தே", "சொப்பன வாழ்வில்", "நாட்டியக்கலையே", "அம்பாமனம் கனிந்து" முதலான பாடல்கள், சிவகவியை மாபெரும் இசைக் காவியமாகச் செய்தன.
"சிவகவி" பல ஊர்களில் ஒரு வருடத்துக்கு மேல் ஓடியது. இதை 10 தடவை, 20 தடவை பார்த்தவர்கள் ஏராளம். "பாகவதரே முயன்றாலும், இனி இது போன்ற படத்தைக் கொடுக்க முடியாது. அவருடைய சிகரம் இதுதான்" என்று பலரும் கூறினர். ஆனால் அந்தக் கணிப்பை பொய்யாக்கினார், பாகவதர்.
No comments:
Post a Comment