Subscribe:

interesting

தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம்!'

"தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம்!'

நீச்சல் போட்டியில் சாதித்த மாதவி லதா: எனது சொந்த ஊர் ஆந்திரா அருகில் சத்துப்பள்ளி. நான் பிறந்த ஏழு மாதத்தில், போலியாவால் பாதிக்கப்பட்டேன். பின், 10ம் வகுப்பு வரை பெற்றோர், தோழி, சகோதரி தோளில் பள்ளிக்கு சென்றேன். என் இடது கால் சரிவர நிற்க முடியாததால் எங்கு சென்றாலும் தவழ்ந்து தான் செல்வேன். அவ்வளவு கஷ்டத்திலும் நல்ல மாணவி என பெயர் வாங்கினேன். கல்லூரி போகும் அளவுக்கு உடல் நிலை ஒத்துழைக்காததாலும், என்னை போன்றவர்களுக்கு கல்லூரி கட்டமைப்புகள் இல்லாததாலும், தனியாக பி.எஸ்சி., படித்தேன். மற்றவர்கள் தயவில் வாழ்ந்தது போதும் என்று நினைத்து, இரும்பு, "வாக்கர்' பயன்படுத்தி நடக்க ஆரம்பித்தேன். எல்.ஐ.சி.,யில் வேலைக்காக விண்ணப்பித்து, எல்லா தேர்விலும், தேர்ச்சி பெற்றும் அந்த வேலை கிடைக்கவில்லை. பின், மீண்டும் வங்கி தேர்வு எழுதினேன். அதுக்கும் நான் சரிவர மாட்டேன் என்று கூறினர். நீண்ட போராட்டத்துக்கு பின், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதாராபாத்தில் வேலை கிடைத்தது. அந்த வேலை செய்து கொண்டே, டிரேடிங், ஷேர் மார்க்கெட் தொடர்பாக படித்தேன். பின், தனி ஆளாக சாதிக்கும் நம்பிக்கை எனக்குள் வந்தது. அரசு வேலையையும், ஆந்திராவையும் விட்டு விட்டு, சென்னை வந்தேன். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், முதுகு வலி ஏற்பட ஆரம்பித்தது. அதற்கு, "பிசியோதெரபிஸ்ட்' மூலம், "ஹைட்ரோதெரபி' எடுத்தேன். பின், நீச்சல் தான் சிகிச்சை என்று ஆனது; தனியாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டேன். இப்பொழுது, "கார்ப்பரேட் ஒலிம்பியாட் போட்டி'யில் பதக்கம் வெல்லும் அளவுக்கு தயாராகி விட்டேன். என்னை போல மாற்றுத்திறனாளிகளுக்கு, நீச்சல் கற்றுக் கொடுத்து வருகிறேன். தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம்!

"டிக்கியில் ஏணி; ஏறினால் கட்டு கட்டாய் பணம்!'

சட்டசபை தேர்தல் நேரத்தில், பணம் கடத்தலை நள்ளிரவில் பிடித்த, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா: அப்போது நான், திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர். நள்ளிரவு, 1.30 மணிக்கு தேர்தல் பணிகளை முடித்துவிட்டு, கேம்ப் ஆபீஸ் இல்லத்தில் தூங்கச் சென்றேன். தொலைபேசியில் ஆண் குரல் அழைப்பு. திருச்சி பொன்னகர் பகுதியில், சாலையோரமாக இரண்டு தனியார் பஸ்களுள் ஏதோ ஒன்றில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, கட்டுக் கட்டாக பணம் இருப்பதாக தகவல்; அதுவும், கோடிக்கணக்கில். போனில் பேசியவர், "எப்படியு ம் 20 கோடி ரூபாய் இருக்கும்' என கூறிய தகவலை, நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஏனெனில், தமிழகத்தில் பரவலாக, அந்த சமயத்தில்தான் வாகன சோதனைகளின்போது, லட்ச லட்சமாய் பணம் கையகப்படுத்தப்பட்டது.
தகவல் கிடைத்த மறு நிமிடமே, உதவியாளர் மற்றும் கார் ஓட்டுனர் என இருவருடன், கிளம்பினேன். குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த போது, நள்ளிரவு 1.45 மணி; ஆள் அரவம் ஏதுமில்லை. "2 மணிக்கெல்லாம் பஸ் மூவ் ஆயிடும்' என, தகவல் தந்திருந்தார் அந்த நபர். ஆர்.டி.ஓ., வாகனத்தை சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்தே கண்காணித்தோம். என்ன ஆச்சரியம்! அடுத்த, ஐந்து நிமிடத்தில், இன்னோவா கார் ஒன்று, அந்த பஸ்கள் அருகே வந்து நின்றது. இனிமேலும் தாமதித்தால், பஸ்சை கிளப்பிக் கொண்டு போய் விடுவார்களோ என்ற அச்சம். இன்னோவா காரை நெருங்கியபோது, உள்ளே மூன்று நபர்கள், ஏதும் தெரியாத மாதிரி உட்கார்ந்திருந்தனர். முதலில் கார் சோதனையிடப்பட்டது; அதில் ஏதுமில்லை. அடுத்து, ஒரு பஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதிலும் ஒன்றுமே இல்லை. மற்றொரு பஸ்சின் உள்ளே தோண்டி துழாவப்பட்டது; எதுவுமே இல்லை. மேற்கூரையில் லக்கேஜ்கள் மட்டுமே இருந்தன. சந்தேகம் எழுந்தது, ஆனால், அந்த பஸ்சில் மேலே ஏற படிகள் ஏதுமில்லை.
டிக்கியை திறந்தால், அதில் ஓர் ஏணி. மேலேறிச் சென்றால், அங்கு ஐந்து பெரிய டிராவல் பைகள்; ஒவ்வொன்றாய் திறந்து பார்த்தால், ஐநூறு ரூபாய் கட்டு, ஆயிரம் ரூபாய் கட்டு என கட்டு கட்டாக பணம்!

No comments:

Post a Comment

Followers

Please put vote