Subscribe:

interesting

அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கார் வாழ்க்கைப்பாதை



இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை" என்று போற்றப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார், தனது விடா முயற்சியாலும், உழைப்பாலும் எதிர்ப்புக்களை தவிடு பொடியாக்கி முன்னுக்கு வந்தவர்.
மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டம் அம்பாவாடே என்ற கிராமத்தில் 14_4_1891_ல் பிறந்தார். தந்தை ராமாஜி மாலோஜி. தாய் பீமாபாய். ஏழைக் குடும்பமான இவர்களுக்கு 14 குழந்தைகள். கடைசிப் பிள்ளைதான் அம்பேத்கார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் பீமாராவ் ராம்ஜி. இவர்களது குடும்பம், மகார் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தது.
அம்பேத்கார் கல்வி நிலையங்களில் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். உயர்ந்த சாதிப்பிள்ளைகளும், ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் தாழ்ந்த சாதிப்பிள்ளைகளைக் கேவலமாக நடத்தினர். தாழ்ந்த சாதிப்பிள்ளைகள், உயர் சாதிப்பிள்ளைகளுடன் சேர்ந்து உட்காரக்கூடாது, உயர்சாதிப்பிள்ளைகளுடன் பேசக்கூடாது, தொடக்கூடாது என்று ஒதுக்கி வைத்தனர்.
இந்த அவமானத்தையெல்லாம் தாங்கிக்கொண்டு படிக்க வேண்டுமா என்றுகூட அம்பேத்கார் நினைத்தது உண்டு. ஆனால் அம்பேத்கார் என்ற அந்தன ஆசிரியர் ஒருவரின் அன்பும் அரவணைப்பும் அவர் எண்ணத்தை மாற்றின. தாழ்த்தப்பட்டவர்களும் மனிதர்களே. அவர்களையும் சமமாக மதித்து நடத்த வேண்டும் என்ற உயரிய கொள்கையுடைய அந்த ஆசிரியர், அம்பேத்கார் படித்து முன்னேற எல்லா உதவிகளையும் செய்தார். அவருடைய அன்புக்கு அடிமையான அம்பேத்கார், பீமாராவ் ராம்ஜி என்ற தன் பெயரை "அம்பேத்கார்" என்று மாற்றிக்கொண்டார். அன்று முதல் அவர் பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார் (பி.ஆர்.அம்பேத்கார்) என்று வழங்கப்படுகிறது.
14_வது வயதில் மெட்ரிகுலேஷன் படித்துத் தேறியதும், அம்பேத்காருக்கு அவர் தந்தை திருமணம் செய்து வைத்தார். மனைவி பெயர் ராமாபாய். பிறகு பம்பாய் கல்லூரியில் இண்டர் மீடியட் படித்து முடித்தார். அடுத்து பரோடா மன்னரின் உதவி பெற்று "பி.ஏ." படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் பரோடா அரசின் படையில் சேர்ந்து பணியாற்றினார். அங்கும் மற்றவர்களால் தொல்லை. இடையில் தந்தை காலமாகி விடவே, வேலையை விட்டுவிட்டு பம்பாய் திரும்பினார்.
மேலும் மேலும் படிக்க விரும்பினார். ஆனால் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. மீண்டும் பரோடா மன்னரின் உதவி பெற்று 1913_ல் அமெரிக்கா சென்று கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார்.
பின்னர், பல சிரமங்களுக்கு இடையே லண்டன் சென்று படித்து, பொருளாதாரத்தில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி "எம்.எஸ்சி" பட்டம் பெற்று பம்பாய் திரும்பினார். மேலும் படித்து "பாரிஸ்டர்" பட்டம் பெற்று வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காக ஒரு சங்கத்தை நிறுவினார். தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபட்டார். அவருடைய சேவையைப் பாராட்டி பம்பாய் மாகாண கவர்னர், பம்பாய் மேல்_சபை உறுப்பினர் பதவியை அளித்தார்.
மாகாத்து என்ற நகரில் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது. அம்பேத்கார் அங்கு சென்று, இதைக் கண்டித்துப் பேசினார். அவரே குளத்தில் இறங்கி நீர் அருந்தினார். தாழ்த்தப்பட்ட மற்றவர்களும் நீர் அருந்தினர். பெரும் மோதல் ஏற்பட்டு, பிரச்சினை கோர்ட்டுக்குச் சென்றது. எல்லா மக்களும் நீர் எடுக்கலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இது அம்பேத்காருக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.
காந்தியை பின்பற்றுபவராகத் தோன்றினாலும், கொள்கை அளவில் அம்பேத்காருக்கும், காந்திக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அது பிறகு சமரசமாகத் தீர்ந்தது.
அம்பேத்காரின் மனைவி ராமாபாய் 27_5_1935 அன்று காலமானார். இதனால் பேரதிர்ச்சி அடைந்த அம்பேத்கார் வாழ்க்கையில் சலிப்படைந்தார். துறவி போல வாழ்ந்தார். பின்னர் "சுதந்திர தொழிலாளர் கட்சி" என்ற கட்சியை தொடங்கினார். அம்பேத்காரின் முயற்சியால், பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை கிடைத்தது.
உயர்ந்த சாதியினரை உறுப்பினர்களாகக் கொண்டு இருந்த வைசிராய் நிர்வாக சபையில், அம்பேத்காரின் சேவையைப் பாராட்டி அவரும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அத்துடன் தொழிலாளர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் பதவி வகித்தார். தொழிலாளர் முன்னேற்றத்துக்காக அரும் பணியாற்றினார்.
1946_ம் ஆண்டு டிசம்பர் 9_ந்தேதி, ராஜேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணயசபை செயல்படத்தொடங்கியது. அதில், சட்டம் இயற்றும் குழுவில் அம்பேத்காரும் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவினர் இயற்றியதுதான் இந்திய அரசியல் சட்டம்.
சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேரு பொறுப்பு ஏற்றதும், அவரது மந்திரிசபையில் அம்பேத்கார் சட்ட அமைச்சராக இருந்து பணியாற்றினார். அரசியல் நிர்ணய சபையின் 3_வது கூட்டத்தில், தீண்டாமையை ஒழிக்க சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அம்பேத்காரின் நீண்ட கால முயற்சி வெற்றி பெற்றது.
அம்பேத்கார், ஓயாமல் உழைத்ததால் உடல் நலம் குன்றி பம்பாய் மருத்துவமனையில் சேர்ந்தார். சாரதா அம்மையார் என்ற டாக்டரின் கனிவான சேவையால் அவர் குணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அந்த அம்மையாரின் விருப்பத்துடன் அவரை மறுமணம் புரிந்து கொண்டார். இதன் மூலம் பிராமண வகுப்பைச் சேர்ந்த சாரதா அம்மையார், கலப்புத் திருமணத்திற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
நேரு மந்திரிசபையில் சட்ட மந்திரியாக பணியாற்றியபோது, மற்றவர்களுக்கும் அம்பேத்காருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மந்திரி பதவியை விட்டு விலகி எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
பல காரணங்களால் இந்து மதத்தின் மீது சலிப்பு அடைந்த அம்பேத்கார், 1956 அக்டோபர் மாதம் இந்து மதத்தை விட்டு, மனைவி சாரதா அம்மையாருடன் புத்த மதத்தைத் தழுவினார். பிறகு புத்த மதத்தைப் பரப்பும் முயற்சியில் தீவிரப் பங்கு கொண்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்கார் 1956 டிசம்பர் 6_ந்தேதி காலமானார். 1990_ல் இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா" விருது அவருக்கு (மறைவுக்குப்பின்) வழங்கப்பட்டது

No comments:

Post a Comment

Followers

Please put vote