Subscribe:

interesting

தோல்விகளைக் கண்டு அஞ்சாத ஏவி.எம். எதிர் நீச்சல் போட்டு சாதனை படைத்தார்

தோல்விகளைக் கண்டு அஞ்சாத ஏவி.எம். எதிர் நீச்சல் போட்டு சாதனை படைத்தார்

"முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து, சினிமா உலகில் அரும் பெரும் சாதனைகளை நிகழ்த்தி, கணக்கில் அடங்கா கலைஞர்களை உருவாக்கியவர், ஏவி.மெய்யப்ப செட்டியார். "ஏவி.எம்" என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஏவி.மெய்யப்ப செட்டியாரின் சொந்த ஊர் காரைக்குடி. 1907 ஜுலை 28_ந்தேதி பிறந்தார். நடுத்தர நகரத்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தகப்பனார் ஆவிச்சி செட்டியார், காரைக்குடியில் "ஏவி.அண்ட் சன்ஸ்" என்ற கடையை நடத்தி வந்தார். காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வித்யா சாலையில் பள்ளிப் படிப்பை பயின்ற மெய்யப்ப செட்டியார், தகப்பனாருக்கு உதவியாக இருந்து கடையையும் கவனித்து வந்தார்.
1928_ம் ஆண்டில், இந்த "ஏவி.அண்ட் சன்ஸ்" நிறுவனம், கிட்டப்பா, சுந்தராம்பாள் ஆகியோரின் இசைத்தட்டுக்களை 5 தென் மாவட்டங்களுக்கு விற்பனை உரிமை பெற்றது. இந்த வேலையாக அடிக்கடி சென்னை சென்ற மெய்யப்ப செட்டியார், அங்கு நாராயண அய்யங்கார் (பிற்காலத்தில் "நாராயணன் அண்டு கம்பெனி" அதிபர்), சிவம் செட்டியார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து "சரஸ்வதி ஸ்டோர்ஸ்" என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனம் ஜெர்மன் "ஓடியன்" கம்பெனியுடன், இசைத்தட்டுக்களை தயாரிக்கும் ஒப்பந்தம் செய்து கொண்டது. முன்பு, வெறும் கர்நாடக சங்கீதப் பாடல்கள் மட்டுமே இசைத்தட்டுகளாக வந்தன. ஆனால், இவர்கள் பாமர மக்களுக்கு பிடித்தமான கிராமியப் பாடல்களையும் இசைத்தட்டுகளாக வெளியிட்டனர்.
"வண்ணான் வந்தானே... வண்ணாரச் சின்னான் வந்தானே", "ட்ரியோ... டேயன்னா...", "கழுகு மலை குருவிக்குளம்..." என்பன போன்ற இசைத் தட்டுகள் அமோகமாக விற்பனை ஆயின. அக்காலத்தில் சினிமா படங்கள் 20 ஆயிரம் அடி நீளத்தில் 40, 50 பாடல்களுடன் தயாராகி வந்தன.
சாதாரண நடிகர், நடிகைகளை வைத்து குறைந்த பாடல்களுடன், நீளம் குறைந்த படங்களை தயாரிக்க முடிவு செய்தார், ஏவி.எம். அதன்படி, 1934_ல் கல்கத்தா சென்று தனது முதல் படமான "அல்லி அர்ஜுனா"வை ரூ.80 ஆயிரம் செலவில் தயாரித்தார்.
அதில் பெரும் நஷ்டம். அடுத்து "ரத்னாவளி" என்ற படத்தை தயாரித்து (செலவு ரூ.1 லட்சம்) 1936_ல் தீபாவளிக்கு வெளியிட்டார். இதுவும் தோல்வி. 1937_ல் புனா சென்று "நந்தகுமார்" என்ற தனது 3_வது படத்தை எடுத்தார். இந்த படத்தில்தான் டி.ஆர்.மகாலிங்கம் பாலகிருஷ்ணனாக அறிமுகமானார்.
சொந்தக் குரலில் பாடாமல் இரவல் குரலில் பாடும் முறை, முதன் முதலாக இப்படத்தில்தான் புகுத்தப்பட்டது. தேவகி வேடத்தில் நடித்த பெண்ணுக்குப் பாடத்தெரியாது. அப்போது மும்பையில் பிரபல பாடகியாக இருந்த லலிதா வெங்கட்ராமனின் பாடலைப் பதிவு செய்து, தேவகிக்காகப் பயன்படுத்தினார்கள்.
"நந்தகுமார்" ஓரளவு நன்றாக ஓடிய படம். என்றாலும், நஷ்டம்தான். இப்படி வரிசையாக மூன்று படங்களும் தோல்வி அடைந்தாலும், ஏவி.எம். மனம் தளரவில்லை. தோல்விக்குக் காரணம் என்ன என்று நிதானமாக யோசித்தார். சொந்தத்தில் ஸ்டூடியோ இல்லாததே இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்.
சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கத் தீர்மானித்து, சிலருடன் கூட்டு சேர்ந்து 1940_ல் சென்னையில் "பிரகதி ஸ்டூடியோ"வை தொடங்கினார். ரூ.1 லட்சம் செலவில் தொடங்கப்பட்ட அந்த ஸ்டூடியோவில் முதன் முதலாக "பூகைலாஸ்" என்ற தெலுங்கு படத்தை தயாரித்து வெளியிட்டார்.
ஆந்திராவில் அதற்கு நல்ல வரவேற்பு. 25 வாரம் ஓடியது. தொடர்ந்து 5 ஆண்டுகளில் "வசந்த சேனா", "அரிச்சந்திரா", "வாயாடி _ போலி பாஞ்சாலி", "சபாபதி" ஆகிய படங்களை தயாரித்தார். இதில் "சபாபதி"யை ஏவி.மெய்யப்ப செட்டியாரே டைரக்ட் செய்தார். அவர் டைரக்ஷன் பொறுப்பை ஏற்ற முதல் படம் இது.
1941 டிசம்பரில் வெளியான "சபாபதி" வெற்றிப்படமாக அமைந்தது. பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை கதை இது. வசனத்தையும் அவரே எழுதினார். கதாநாயகனாக டி.ஆர்.ராமச்சந்திரனும், அசட்டு வேலைக்காரன் சபாபதியாக காளி என்.ரத்தினமும், கதாநாயகியாக பத்மாவும் நடித்தனர். கே.சாரங்க பாணியும் உண்டு.
"சோடா கொண்டு வா" என்று ராமச்சந்திரன் சொன்னால், சோடா பாட்டிலை கொண்டு வந்து நீட்டுவார், காளி என்.ரத்தினம். "முட்டாள்! உடைச்சு கொண்டா!" என்றால், உள்ளே போய் பாட்டிலை துண்டு துண்டாக உடைத்து தட்டில் கொண்டுவருவார்! இப்படி, ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த படம், சபாபதி.
இந்தப் படத்தில், கதாநாயகன் டிஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச்சம்பளம் 67 ரூபாய். கதாநாயகிக்கு 45 ரூபாய். படத்தின் மொத்த செலவே 32 ஆயிரம் ரூபாய்தான். பின்னர் "என் மனைவி" என்ற நகைச்சுவைப் படத்தைத் தயாரித்தார். கே.சாரங்கபாணி, கே.ஆர். செல்லம் முக்கிய வேடத்தில் நடித்த இப்படத்தை சுந்தர்ராவ் நட்கர்னி டைரக்ட் செய்தார். நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த இந்தப்படமும் வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment

Followers

Please put vote