தமிழ்த்திரை உலகின் முதல் பொற்காலத்தில், பாகவதருக்கு அடுத்த இடத்தைப் பெற்றிருந்தவர்,
பி.யு.சின்னப்பா. "நடிக மன்னன்" என்று புகழ் பெற்றவர். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் பாகவதர். ஆனால் பி.யு.சின்னப்பா, எதிர்நீச்சல் போட்டு சூப்பர் ஸ்டார் ஆனவர்.
சின்னப்பாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை. சின்னப்பாவின் தந்தை உலகநாதப் பிள்ளை, நாடக நடிகர். சின்னப்பாவின் இயற்பெயர் சின்னசாமி. நடிகரான பிறகு "சின்னப்பா" என்று மாற்றிக்கொண்டார். தந்தை உலகநாத பிள்ளை நாடக நடிகராக இருந்த காரணத்தினால், சின்னப்பாவும் தனது ஐந்தாவது வயதில் (1922_ல்) மேடை ஏறினார்.
நன்றாக நடிக்கவும், பாடவும் கற்றுக்கொண்டார். கத்திச்சண்டை, குத்துச்சண்டை முதலியவற்றில் பயிற்சி பெற்றார். சிறுவயதில் பெற்ற பயிற்சிகள், பிற்காலத்தில் திரை உலகில் ஜொலிப்பதற்கு உதவியாக இருந்தன. டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் சில காலம் இருந்த பிறகு, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார்.
அங்கு முக்கிய வேடங்கள் கிடைத்ததுடன், மாதம் 75 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. அக்காலத்தில் இது பெரிய தொகை. நாடகத்தில் சின்னப்பா கதாநாயகனாக நடித்தபோது, அவருக்கு ஜோடியாக எம்.ஜி.ஆர். பெண் வேடத்தில் நடித்திருக்கிறார் என்ற செய்தி, இன்றைய தலைமுறையினருக்கு வியப்பளிக்கும்.
சின்னப்பாவை விட எம்.ஜி.ஆர். ஒரு வயது இளையவர். அக்காலத்தில், பாடும் திறமை உள்ளவர்கள் மட்டும்தான் நாடகத்திலோ, சினிமாவிலோ கதாநாயகனாக நடிக்க முடியும். எம்.ஜி. ஆருக்கு அழகும், திறமையும் இருந்தும், பாடத்தெரியாத காரணத்தினால், அப்போது கதாநாயகனாக முடியவில்லை.
பின்னணி பாடும் முறை வந்த பிறகுதான் கதாநாயகன் ஆனார். பிற்காலத்தில் "சந்திர லேகா" படத்தில் கதாநாயகனாக நடித்த எம்.கே.ராதாவின் தந்தை எம்.கந்தசாமி முதலியார், நாடகக்குழு ஒன்றை நடத்தி வந்தார். அந்த நாடகக் குழுவில் சின்னப்பா சேர்ந்தார்.
நாடகக் குழுவுடன் சின்னப்பா பர்மா சென்றார். பர்மாவில் சுமார் 6 மாத காலம் சுற்றுப்பயணம் செய்த இந்த நாடகக் குழுவினர், பல நாடகங்களை நடத்தினர். அதில் சின்னப்பா முக்கிய வேடங்களில் நடித்தார். துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் புகழ் பெற்று விளங்கிய ஜே.ஆர்.ரங்கராஜ் எழுதிய "சந்திரகாந்தா" என்ற நாவல் மிகவும் புகழ் பெற்றது.
அதை நாடகமாக்கினார்கள். போலி மடாதிபதியின் லீலைகளை அம்பலப்படுத்தும் அந்த நாடகத்தில், சுண்டூர் இளவரசன் என்ற முக்கிய வேடத்தில் சின்னப்பா நடித்து, ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றார். 1936_ல் ஜூபிடர் பட நிறுவனத்தை தொடங்கிய எம்.சோமசுந்தரமும், எஸ்.கே.மொகிதீனும், "சந்திரகாந்தா"வை படமாக்கினர்.
நாடகத்தில் நடித்த அதே வேடத்தில், சுண்டூர் இளவரசனாக சின்னப்பா நடித்தார். படத்தில் மடாதிபதியாகவும், "சி.ஐ.டி"யாகவும் நகைச்சுவை நடிகரான காளி. என்.ரத்தினம் நடித்து, சக்கை போடு போட்டார். படம் வெற்றி பெற்றது. சின்னப்பாவுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
சின்னப்பா தொடர்ந்து ராஜமோகன் (1937), பஞ்சாப் கேசரி (1938), அனாதைப் பெண் (1938), மாத்ருபூமி (1939) ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் சுமாராக ஓடின. சின்னப்பாவுக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. புதிதாக பட வாய்ப்பும் வரவில்லை.
இதனால் நொந்து போன சின்னப்பா, சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டு, சாமியாராகி விட முடிவு செய்தார். 45 நாட்கள் மவுன விரதம் இருந்தார். உண்ணா விரதமும் மேற்கொண்டார். இந்த சமயத்தில் (1940) அவர் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
அலெக்சாண்டர் டூமாஸ் எழுதி, ஆங்கிலத்தில் வெளிவந்த "மேன் இன் தி அயர்ன் மாஸ்க்" (இரும்பு முகமூடி மனிதன்) என்ற படத்தை, தமிழில் "உத்தமபுத்திரன்" என்ற பெயரில் தயாரிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தீர்மானித்தார்.
இதில் கதாநாயகனாக (இரட்டை வேடத்தில்) நடிக்க சின்னப்பா ஒப்பந்தம் ஆனார். தமிழில் ஒருவரே மாறுபட்ட இரு வேடங்களில் நடித்த படங்கள் இதற்கு முன் வெளிவந்திருந்தாலும், ஒரே தோற்றமுள்ள இருவராக (இரட்டை வேடத்தில்) ஒரு நடிகர் நடிப்பது அதுவே முதல் தடவை.
சின்னப்பாவுடன் இன்னொரு சின்னப்பாவை ஒரே நேரத்தில் திரையில் கண்ட ரசிகர்கள் அதிசயப்பட்டு கைதட்டினார்கள். படம் வெற்றி பெற்றது. சின்னப்பா பெரும் புகழ் பெற்றார். சின்னப்பாவின் அதிர்ஷ்ட சக்கரம் வேகமாகச் சுழல ஆரம்பித்தது.
பட்சிராஜா ஸ்டூடியோ தயாரித்த "ஆர்யமாலா" (காத்தவ ராயன் கதை) சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அடுத்து வெளிவந்த "கண்ணகி" பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்ல, இளங்கோவன் எழுதிய வசனங்கள் சிகரத்தைத் தொட்டன. கண்ணகியாக கண்ணாம்பாவும், கோவலனாக சின்னப்பாவும் போட்டி போட்டு நடித்தனர்.
என்.எஸ். கிருஷ்ணன் _ டி.ஏ. மதுரம் காமெடி, படத்திற்கு மேலும் மெரு கூட்டியது. இந்தப் படத்தின் மூலம், பாகவதருக்கு அடுத்த "சூப்பர் ஸ்டார்" அந்தஸ்தை சின்னப்பா பெற்றார். ஏற்கனவே பாகவதர் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார். "ஆர்யமாலா", "கண்ணகி" ஆகிய படங்கள் மூலமாக சின்னப்பாவுக்கு என்று தனி ரசிகர் கோஷ்டி உருவாயிற்று.
"பாகவதர் சிறந்த நடிகரா? சின்னப்பா சிறந்த நடிகரா?" என்று இரு கோஷ்டிகள் இடையே காரசாரமான விவாதங்கள் நடப்பதுண்டு; கை கலப்பும் நடப்பதுண்டு! பிற்காலத்தில், எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும், சிவாஜிகணேசன் ரசிகர்களுக்கும் மோதல்கள் நடந்தன அல்லவா? அதுமாதிரியான நிலைதான்!
பாகவதர் தனக்கு ஏற்ற வேடங்களை மட்டும் ஏற்று நடித்தார். சின்னப்பா எத்தகைய படங்களிலும், எந்த வேடத்திலும் நடித்தார். வெற்றி _ தோல்வி பற்றிக் கவலைப்படவில்லை. பாகவதர் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டும் நடித்தார்; சின்னப்பா பல படங்களில் நடித்தார்.
"ஹரிதாஸ்" வரை பாகவதர் வெற்றி மேல் வெற்றி பெற்றார். சின்னப்பாவுக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தன. எனினும், எந்தப் படத்திலும் அவர் நடிப்பில் குறை வைக்கவில்லை. பாகவதர், இனிய குரலால் இசையில் கொடி கட்டிப் பறந்தார். சின்னப்பாவின் குரல் கரடு முரடாக இருந்தாலும், கடினமான பாடல்களையும் சுலபமாகப் பாடினார்.
பாகவதர் பொன் நிறம் கொண்டவர். அழகிய தோற்றம் அவருக்கு நிறைய ரசிகர் _ ரசிகைகளைத் தேடிக்கொடுத்தது. சின்னப்பா கறுப்பு நிறம். குண்டாக இருப்பார். அப்படி இருந்தும், பாகவதரை சின்னப்பா நெருங்க முடிந்ததற்குக் காரணம், அவரிடம் இருந்த அபாரமான நடிப்பாற்றல்தான்.
கண்ணகிக்குப்பிறகு, குபேர குசேலா (1943), மனோன்மணி (1943), ஹரிச்சந்திரா (1944) ஆகிய படங்களில் நடித்தார். இதில், "மனோன்மணி" வெற்றிப்படம். "குபேர குசேலா" சுமார் ரகம். "ஹரிச்சந்திரா" தோல்விப்படம். ஆனால், அதற்குப்பின் வந்த "ஜகதலப்பிரதாபன்", வரலாறு படைத்தது.
No comments:
Post a Comment