1944_ம் ஆண்டு அக்டோபர் 16_ந்தேதி தீபாவளித் திருநாள். தமிழ்த்திரை உலக வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையின் தொடக்க நாள். அன்றுதான் பாகவதரின் 9_வது படம் "ஹரிதாஸ்" வெளிவந்தது. அது யுத்த காலம். இரண்டாவது உலகப்போர் நடந்து கொண்டிருந்தது.
கச்சா பிலிமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், 11 ஆயிரம் அடிக்குள்தான் படம் தயாரிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டுப்பாடு விதித்தது. எனவே, "ஹரிதாஸ்" 11 ஆயிரம் அடியில் தயாரிக்கப்பட்டது. பக்திமானாகவும், நல்லவராகவும் மட்டுமே நடித்து வந்த பாகவதர் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்தார். இடை வேளை வரை பெண் பித்தர்;
மதுவுக்கு அடிமையானவர்; பெற்றோரை வெறுப்பவர். இடைவேளைக்குப்பின் முனிவரால் சபிக்கப்பட்டு, இரண்டு கால்களையும் இழந்து, பெற்றோர் பாதங்களை சரண் அடைந்து, மீண்டும் கால்களைப் பெற்று பக்திமானாக மாறுகிறார். இந்த மாறுபட்ட வேடத்தில் அதி அற்புதமாக நடித்தார், பாகவதர்.
"வாழ்விலோர் திருநாள்" என்று பாடிக்கொண்டே வெள்ளைக் குதிரையில் வரும் முதல் காட்சியே ரசிகர்களின் கைத்தட்டலைப் பெற்றது. "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற பாடலை பாகவதர் பாட டி.ஆர்.ராஜகுமாரி ஆட... அந்தக் காட்சியைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
"அன்னையும் தந்தையும்", "கிருஷ்ணா முகுந்தா", "என்னுடல் தனில் ஈமொய்த்த போது", "நிஜமா இது நிஜமா" முதலான பாடல்கள், செவியில் அமுதத்தைப் பாய்ச்சின. பாடல்களை பாபநாசம் சிவன் எழுத, ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். இளங்கோவன் வசனம் எழுத, சுந்தர்ராவ் நட்கர்னி டைரக்ட் செய்திருந்தார்.
தொழில் நூட்பத்திலும் இப்படம் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தக் காலக்கட்டதில் தமிழ்ப்பட ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாகவும் தமிழ்ப்பட உலகின் "நெம்பர் 1" நடிகையாகவும் திகழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரி, பெரும்பாலும் கவர்ச்சிகரமான வில்லி வேடத்தில் நடித்து வந்தார். "ஹரிதாஸ்" படத்திலும் வில்லியாக _ தாசி ரம்பாவாக நடித்தார்.
பாகவதரின் மனைவியாக பிரபல பாடகி என்.சி.வசந்தகோகிலம் நடித்தார். என்.எஸ்.கிருஷ்ணன்_டி.ஏ.மதுரம் நகைச்சுவை பிரமாதமாக அமைந்தது. முதல் காட்சியில், ஒரு பெண்ணை பாகவதர் குதிரை மீது அமர்ந்தபடி துரத்திச் செல்வார். அந்த ஒரே காட்சியில் நடித்த பெண், பிறகு பிரபல நடிகையானார்.
அவர்தான் பண்டரிபாய்! டி.ஆர்.ராஜகுமாரியின் தோழிகளில் ஒருவராகத் தோன்றிய டி.ஏ. ஜெயலட்சுமி, பின்னர் "நாம் இருவர்" படத்தின் கதாநாயகியானார். கதை, இசை, நடிப்பு, டைரக்ஷன், எடிட்டிங், ஒளிப்பதிவு என சகல அம்சங்களிலும் "ஹரிதாஸ்" சிறந்து விளங்கியது. 11 ஆயிரம் அடிக்குள் முடிக்க வேண்டியிருந்ததால், டைரக்டரும், எடிட்டருமான சுந்தர்ராவ் நட்கர்னி திறமையாக எடிட் செய்து, படத்துக்கு விறுவிறுப்பை ஏற்றியிருந்தார்.
படம் மெகா சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. தியேட்டர்களில் எல்லாம் திருவிழாக்கோலம். அப்போதெல்லாம் "டிக்கெட்" வாங்குவதற்கு "கியூ" வரிசை யெல்லாம் கிடையாது; குஸ்தி போட்டுத்தான் டிக்கெட் வாங்க வேண்டும்! "ஹரிதாஸ்" படத்தின் மூலம் பாகவதரின் புகழ் விசுவரூபம் எடுத்தது.
ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டும் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த பாகவதர், "ராஜயோகி", "வால் மீகி", "பில்கணன்", "ஸ்ரீமுருகன்" உள்பட 10 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இவற்றில் ராஜயோகி உள்பட ஒரு சில படங்களின் படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்ட நிலையில், பாகவதர் விதியின் பிடியில் சிக்கினார்.
சினிமா நடிகர் _ நடிகைகள் பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் எழுதி வந்த "இந்து நேசன்" வார இதழின் ஆசிரியர் லட்சுமி காந்தன், ரிக்ஷ்வில் போகும்போது 1944 நவம்பர் 8_ந்தேதி கத்தியால் குத்தப்பட்டார். சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் மரணம் அடைந்தார். லட்சுமிகாந்தன் கொலைக்கு சதி செய்ததாக, பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு சென்னை செசன்சு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டதில் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, பாகவதரும், கிருஷ்ணனும் லண்டனில் இருந்த உச்ச நீதிமன்றத்தில் ("பிரிவு கவுன்சில்") அப்பீல் செய்தனர்.
சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை சரியானபடி விசாரிக்கவில்லையென்றும், எனவே மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் "பிரிவு கவுன்சில்" உத்தரவிட்டது. அதன்படி வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரித்தது. பாகவதர், கிருஷ்ணன் சார்பில் பிரபல வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் ஆஜராகி வாதாடினார்.
பாகவதரும், கிருஷ்ணனும் நிரபராதிகள் என்று கூறி அவர்களை விடுதலை செய்து, 25_4_1947_ல் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. 2 ஆண்டுகள், 2 மாதங்கள், 13 நாட்கள் சிறையில் இருந்த பாகவதரும், கிருஷ்ணனும் சென்னை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
பாகவதர் சிறையில் இருந்த காலகட்டத்தில், "ஹரிதாஸ்" படம் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. "இனி பாகவதரை என்று காண்போம்" என்று கண்ணீர் சிந்தியபடி, அவர் ரசிகர்கள் 10 தடவை 20 தடவை என்று "ஹரிதாஸ்" படத்தைப் பார்த்தனர்.
தமிழ்நாடெங்கும் பெரும்பாலான நகரங்களில் 2 ஆண்டுகளுக்கு மேலாக ஹரிதாஸ் ஓடியது. சென்னையில், ஒரே தியேட்டரில் ("பிராட்வே") 16_10_1944 முதல் 22_11_1946 வரை ஓடியது. அதாவது 1944 தீபாவளிக்கு திரையிடப்பட்டு, 3 தீபாவளிகளைக் கண்டது. வாரங்களில் சொன்னால் மொத்தம் 110 வாரங்கள் (768 நாட்கள்) ஓடி வரலாறு படைத்தது.
தமிழ்ப்படங்களில் இதுவே "ரிக்கார்ட்". இந்த சாதனை இது வரை முறியடிக்கப்படவில்லை. சிறையில் இருந்து விடுதலையான பாகவதரை, தங்கள் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்வதற்கு, பல பட அதிபர்கள் "அட்வான்ஸ்" பணத்துடன் சிறை வாசலில் காத்திருந்தனர்.
ஆனால், சிறையில் இருந்தபோது தனக்கு ஆறுதல் சொல்லக்கூட பட உலகத்தினர் வராததாலும், "அட்வான்ஸ்" பணத்தைக்கேட்டு சில பட அதிபர்கள் சிறைச்சாலைக்கே நோட்டீஸ் அனுப்பியதாலும், மனம் நொந்திருந்த பாகவதர், மீண்டும் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தார்.
எனவே, "இனி நடிக்க மாட்டேன்" என்று கூறி பட அதிபர்களை திருப்பி அனுப்பிவிட்டார். பாகவதர் முறைப்படி சங்கீதம் பயின்றவர். எனவே, கச்சேரிகள் நடத்தியே பிற்காலத்தை கழித்துவிட விரும்பினார். ஆனால் தமிழிசை சங்கம் தவிர, மற்ற சபாக்கள் அவரை கண்டு கொள்ளவில்லை.
தவிரவும், பாகவதரின் ரசிகர்கள் "மீண்டும் நடியுங்கள்" என்று கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். எனவே, மீண்டும் படத்தில் நடிக்க முடிவு செய்த பாகவதர், சொந்தப்படம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார்.
No comments:
Post a Comment