Subscribe:

interesting

அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அரசு ஊக்கம் தராததால் ரேடியோவை உடைத்து நொறுக்கினார்

"அதிசய மனிதர்", "விஞ்ஞான மேதை" என்று புகழப்பட்டவர் ஜி.டி.நாயுடு. கோவையை சேர்ந்த தொழில் அதிபராக விளங்கிய அவர் தன்னுடைய அயராத உழைப்பால் பல அரிய பொருட்களை கண்டுபிடித்து இவ்வுலகிற்கு வழங்கினார்.
கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில் 31_3_1894_ல் ஜி.டி.நாயுடு பிறந்தார். அவருடைய தந்தை பெயர் கோபால் நாயுடு. சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். பிறகு மாமனார் வீட்டில் வளர்ந்தார். ஆனால் அங்கு அவரால் சரியாகப் படிக்க முடியவில்லை.
எனவே, அவரது கவனம் தொழில் துறையில் திரும்பியது. வாலிப வயதில் மருந்து வியாபாரம் செய்தார். பின்னர் மோட்டார் சைக்கிள் "மெக்கானிக்" காக வேலை பார்த்து வந்தார். தனது விடாத முயற்சியாலும், தொழில் நுட்ப திறமையாலும் விரைவில் பஸ் அதிபர் ஆனார். அவரது முதல் பஸ் பழனிக்கும் _ பொள்ளாச்சிக்கும் இடையே ஓடியது. அதை ஓட்டிய டிரைவரும் அவரே.
பிறகு படிப்படியாக முன்னேறி பல தொழிற்சாலைகளை நிறுவினார். பல புதிய இயந்திரங்களையும், விஞ்ஞான கருவிகளையும் கண்டுபிடித்தார். ஜி.டி.நாயுடு பல வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார். ஜெர்மன் சென்றிருந்தபோது, ஹிட்லரை சந்தித்துப் பேசினார். வெளிநாட்டு தொழில் நுட்ப திறன்களை நேரில் கண்டறிந்து, அதைப்போன்ற தொழில் நுட்ப கருவிகளை உருவாக்கினார்.
அப்படி அவர் உருவாக்கிய தொழில் கருவிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கோவையில் விஞ்ஞான கூடமாக அமைத்தார். இது இன்று எல்லோரும் கண்டுகளிக்கும் காட்சிக் கூடமாக இருக்கிறது. குறைந்த விலையில், ஒரே நாளில் வீடு கட்டி முடித்துக் காட்டியது அவரது சிக்கன திறனுக்கும், தொழில் திறமைக்கும் எடுத்துக்காட்டு ஆகும்.
தொழில் மேதையான ஜி.டி.நாயுடு, விவசாயத் துறையிலும் வல்லவர். அவர் கண்டுபிடித்த பப்பாளி மரங்கள், பூசணிக் காய் அளவுள்ள பப்பாளிக்காய்களை கொடுத்தது. அதோடு அவர் கண்டு பிடித்த அவரைச்செடி, மரம் போல் வளர்ந்து நல்ல பலனை தந்தது.
அதிகப் படிப்பு படிக்காமலேயே, பல அரிய காரியங்களை ஆற்றி "அதிசய மனிதர்" என்று பெயர் பெற்றார். இவருக்கு சித்த வைத்தியத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. சித்த வைத்திய ஆராய்ச்சியும் செய்து வந்தார்.
ஜி.டி.நாயுடு போட்டோ கலையில் அதிக விருப்பம் உள்ளவர். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், மேல் நாட்டு வகையைச் சேர்ந்த சிறிய காமிராவால், அவரே படம் எடுத்து விடுவார். இவரது பிரசிடெண்டு ஹாலில் பெரிய _ பெரிய போட்டோக்கள் நிரம்பி உள்ளன.
தனது கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கவில்லை என்பதற்காக, 1953_ல் சென்னை கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி, மறைந்த ஈ.வெ.ரா. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் முன்னிலையில் ரேடியோக்களையும் மற்றும் பல விஞ்ஞான கருவிகளையும் உடைத்து நொறுக்கி பரபரப்பை உண்டாக்கினார்.
ஜி.டி.நாயுடுவுக்கு செல்லம்மாள், ரெங்கநாயகி என்று 2 மனைவிகள். முதல் மனைவிக்கு கிட்டம்மாள், சரோஜினி என்ற 2 மகள்களும், 2_வது மனைவிக்கு கோபால் என்ற ஒரே மகனும் பிறந்தார்கள். ஜனாதிபதி வி.வி.கிரியும், மறைந்த தலைவர் பெரியாரும் நண்பர்களாக இருந்தார்கள்.
1973_ம் ஆண்டு இறுதியில் 80 வயது ஆனபோது ஜி.டி.நாயுடுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. ரத்தக்கொதிப்பி னாலும், வாத நோயினாலும் அவதிப்பட்டார்.
இதற்காக வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு கோவைக்கு திரும்பி வந்து வீட்டில் இருந்தவாரே சிகிச்சை பெற்றார்.
ஜி.டி.நாயுடு உடல் நலம் இல்லாமல் இருப்பதை அறிந்த ஜனாதிபதி வி.வி.கிரி, மனைவி சரசுவதி அம்மாளுடன் கோவைக்கு வந்து அவரை பார்த்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் ஜி.டி.நாயுடு பேசினார்.
4_1_1974 அன்று அதிகாலையில் ஜி.டி.நாயுடு உடல் நிலை மோசம் அடைந்தது. நினைவு இழந்தார். அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் சிகிச்சை பலன் இன்றி காலை 9_45 மணி அளவில் ஜி.டி.நாயுடு மரணம் அடைந்தார். உயிர் பிரிந்தபோது மனைவி ரெங்கநாயகி, மகன் கோபால், மகள்கள் கிட்டம்மாள், சரோஜினி, மருமகள் சந்திரலேகா ஆகியோர் அருகில் இருந்தார்கள்.
ஜி.டி.நாயுடுவின் உடல் அவர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பிலும், முதல்_அமைச்சர் கருணாநிதி சார்பிலும் ஜி.டி.நாயுடு உடல் மீது மாவட்ட கலெக்டர் சிவகுமார் மலர் வளையம் வைத்தார். தொழில் அதிபர்கள் ஜி.கே.சுந்தரம், ஜி.கே.தேவராஜ×லு, ஜி.ஆர்.கோவிந்தராஜ×லு, பி.ஆர்.ராம கிருஷ்ணன் மற்றும் பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
மாலையில் அவருடைய உடல் அலங்கரிக்கப்பட்ட தேரில் அவருடைய வீட்டுக்கு எதிரே உள்ள "பிரசிடெண்டு மண் டப"த்துக்கு கொண்டு போகப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர வடிவேலு, கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ரெங்கசாமி, பழைய மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
பிரசிடெண்டு மண்டபத்தில், "சிதை" அடுக்கப்பட்டு இருந்தது. அதன் மீது, உடல் வைக்கப்பட்டது. சடங்குகள் நடந்த பின் "சிதை"க்கு, ஜி.டி.நாயுடுவின் மகன் கோபால் தீ மூட்டினார். தகனம் நடந்த இடத்தில் ஜி.டி.நாயுடுவுக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.
ஜி.டி.நாயுடு மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, கவர்னர் கே.கே.ஷா, முதல்_அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்_அமைச்சர் பக்தவச்சலம், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ம.பொ.சிவஞானம் (தமிழரசு கழகம்), ராமையா (இ.காங்), ராமமூர்த்தி (இ.கம்ï), எம்.கல்யாணசுந்தரம் (வ.கம்ï), ஜி.கே.சுந்தரம் (சுதந்திரா கட்சி), தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் அனுதாப செய்தி வெளியிட்டார்கள். ஜனாதிபதி வி.வி.கிரி தனது அனுதாப செய்தி யில் கூறியிருந்ததாவது:-
40 ஆண்டுகளுக்கு மேலாக நான் அறிவேன். புதிய விஞ்ஞான கருவிகளை கண்டுபிடிப்பதில் அவர் ஆற்றல் மிக்க மேதை. திறமையிலும், புத்தி கூர்மையிலும் அவர் "லட்சத்தில் ஒருவர்" என்று, விஞ்ஞானி சி.வி. ராமன் அடிக்கடி கூறுவார்.
ஏழைகளிடம் அன்பும், இரக்கமும் கொண்டவர். அவர்கள் நலனுக்காக பாடுபட்டு வந்தார். அவருடைய மரணம், தேசத்திற்கு பெரும் இழப்பு."
இவ்வாறு ஜனாதிபதி கிரி கூறினார்.
முதல்_அமைச்சர் கருணாநிதி விடுத்த அனுதாப செய்தியில் கூறி இருந்ததாவது:-
"புதுமையாக சிந்தனை செய்யக்கூடிய விஞ்ஞானியை தமிழகம் இழந்து விட்டது. துணிவுடன் கருத்துக்களை சொல்லக்கூடிய பெரியவர் அவர். அவருடைய மறைவு பெரும் இழப்பாகும். என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."
மேற்கண்டவாறு கருணாநிதி கூறியிருந்தார்.
பவானி நகரின் அருகே பவானி ஆறும், காவிரி ஆறும் கலக்கும் இடமான கூடுதுறையில் ஜி.டி.நாயுடு அஸ்தியை மகன் கோபால் கரைத்தார்.
கோவையில் அவினாசி ரோட்டில் குடியிருந்த ஜி.டி.நாயுடு தனது வீட்டு எதிரிலேயே பெரிய வளாகம் ஒன்றை அமைத்தார். அங்கு மிகப்பெரிய காட்சிக்கூடம், கலை அரங்கம், திருமண மண்டபம் போன்றவை இடம் பெற்றுள்ளன. "பிரசிடெண்ட் ஹால்" என்று அது அழைக்கப்படுகிறது. இந்த காட்சி கூடத்தில் ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த அனைத்து கருவிகள், பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவருடைய சாதனைகளை சித்தரிக்கும் புகைப்படங்களுடன் அலங்கரிக்கப்படுகின்றன.
நுழைவு வாயிலில் அமைந்துள்ள இரு பெரிய கண்ணாடிகள் நம்மை திகைப்பில் ஆழ்த்திவிடும். (நம் உருவத்தை நாமே நம்ப முடியாத அளவுக்கு குட்டை நெட்டையாக காட்டும்).
வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், கல்லூரி, பள்ளிக்கூட மாணவ_மாணவிகள் இந்த காட்சிக்கூடத்தை பார்க்காமல் ஊர் திரும்பமாட்டார்கள். அந்த அளவுக்கு அது பிரசித்தி பெற்று விளங்குகிறது.
ஜி.டி.நாயுடுவின் அயராத உழைப்புக்கும், கண்டுபிடிப்புக்கும் சான்று கூறுவது போல அது அமைந்திருக்கிறது.

No comments:

Post a Comment

Followers

Please put vote