Subscribe:

interesting

பட்டத்திற்கு' ஆசைப்பட்ட அம்மா: பரிவுடன் நிறைவேற்றிய பிள்ளைகள்


சென்னை: "அம்மா ஆசைப்பட்டதற்காக, கட்டில் வாங்கித்தந்தேன்... புடவை வாங்கித் தந்தேன்... நகை வாங்கித் தந்தேன்... கார் வாங்கித் தந்தேன்' என பெற்றோரின் தேவையை நிறைவேற்றிய பலரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், சற்று வித்தியாசமாக, அம்மா ஆசைப்பட்டார் என்பதற்காக, அவரை பட்டதாரியாக்கி, அழகு பார்த்திருக்கின்றனர் அவருடைய பிள்ளைகள்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர், கவுசல்யா செல்லமுத்து, தன்னுடைய, 55வது வயதில், பட்டதாரியாகி இருக்கும் கவுசல்யாவின், "பட்டத்திற்கு' பின்னால் சுவாரஸ்யமான சில சம்பவங்கள் உள்ளன. கவுசல்யாவிற்கு நான்கு சகோதரிகள்; இரண்டு சகோதரர்கள். கவுசல்யாவின் அப்பா, பெண்களை விட, ஆண்கள் கல்வி கற்பதுதான் சிறந்தது என எண்ணி, பெண் குழந்தைகளை பள்ளிப் படிப்பு வரையும், ஆண் குழந்தைகளை கல்லூரிப்படிப்பு வரையும் படிக்க வைத்துள்ளார். கவுசல்யாவிற்கோ படிப்பின் மீது, கொள்ளை ஆசை. பெற்றோர் படிக்க வைத்ததோ, பதினொன்றாம் வகுப்பு வரை. ஆனால், ஒன்பது ஆண்டுகள் கழித்து, பிளஸ் 2 தேர்வை வெற்றிகரமாக எழுதியிருக்கிறார். திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் சென்ற பின்பும், படிப்பு மோகம் விடவில்லை."நமக்குத்தான் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை; நம்முடைய குழந்தைகளையாவது, நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்' என எண்ணி, தன் இரு குழந்தைகளுக்கும், தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார் கவுசல்யா. அவருடைய முயற்சி வீண் போகவில்லை. முதல் மகன் முரளி, 28, பொறியாளராகவும், இளைய மகள் டாக்டராகவும் பணியாற்றி வருகின்றனர்.

ஒருநாள் இருவரும் சேர்ந்து, "அம்மாவிற்கு நிறைவேறாத ஆசை என்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்போம்; அப்படி ஏதும் இருக்குமாயின் அதை நிறைவேற்றி வைப்போம்' என ஆலோசித்துள்ளனர். அதன்படி, கவுசல்யாவிடம் ஆசையை சொல்லுமாறு கேட்டுள்ளனர்.தங்க நகையோ, புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுலாவோ, காரோ கேட்பார் என அவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால், கவுசல்யா கேட்டதோ வேறு. "எனக்கு பட்டப் படிப்பு படிக்கணும்னு ரொம்ப ஆசை. அதான் நிறைவேறாத ஆசை' என்று சொல்ல இருவருக்கும் ஆச்சரியமாயிருந்திருக்கிறது. எப்படியாவது அம்மாவைப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணி, "சென்னை பல்கலைக் கழக' திறந்தவெளி பல்கலை முதல்வர் சுவாமி நாதனை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். 55 வயதில் அம்மாவுக்கு வந்த பட்டப்படிப்பு ஆசையும், அதனை நிறைவேற்ற பிள்ளைகள் காட்டும் ஆர்வமும் அவரை, நெகிழச் செய்ய, உடனடியாக பி.பி.ஏ., படிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்த கவுசல்யா, பி.பி.ஏ., படித்தது ஆங்கில வழியில். படிப்பின் மேலிருந்த காதல், அவரை பட்டதாரியாக மாற்றியது. சமூகத்தைப் பற்றியும், கல்வியின் அவசியத்தைப் பற்றியும் கவுசல்யா எழுதிக்கொண்டிருக்கும் கதைகள், விரைவில் நூலாக வெளிவர உள்ளது

No comments:

Post a Comment

Followers

Please put vote