40 அடி நீள கழிவுநீர் கால்வாய்க்குள் சிக்கிய தொழிலாளி:மனிதநேயத்துடன் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்
செங்குன்றம்:மது போதையால், மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி, 40 அடி நீள கழிவு நீர் கால்வாயில் விழுந்து சிக்கினார். அரை மணி நேர போராட்டத்திற்குப் பின், ஆட்டோ டிரைவரின் உதவியால், அத்தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார்.
சென்னை செங்குன்றம் அடுத்த தீர்த்தக் கரையம்பட்டு, மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 40. கூலித் தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, லேசாக மன நலமும் பாதிக்கப்பட்டவர். இவரது மனைவி கட்டுமான வேலை செய்து வருகிறார்.நேற்று பகல் 12 மணி அளவில், செங்குன்றம் நகர தி.மு.க., அலுவலகம் அருகே, கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த 40 அடி நீளம், 10 அடி அகலம் மற்றும் 3 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் கால்வாயின் சாலை தடுப்புச் சுவர் மீது, முருகன் அமர்ந்திருந்தார். திடீரென்று கால்வாய்க்குள் விழுந்தவர், அப்படியே ஐந்தாறு அடி முன்னோக்கி தவழ்ந்து சென்று, குறுகிய இடத்தில் சிக்கினார்.
அவர் உள்ளே விழுந்ததைப் பார்த்த சிலர், அருகில் உள்ள செங்குன்றம் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கேசவன், எஸ்.ஐ., கண்ணன், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கால்வாய்க்குள் செல்லத் தயங்கினர்.
அப்போது, அங்கு வந்த செங்குன்றம், அண்ணா தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சீனிவாசன், 32 என்பவர், துணிச்சலுடன் தீயணைப்பு வீரர்கள் வைத்திருந்த கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு கால்வாயின் எதிர்த்திசையில் இறங்கி, ராணுவ வீரர் போல் ஊர்ந்தபடி உள்ளே சென்றார்.சில நிமிட போராட்டத்திற்குப் பின், அவரை பாதுகாப்பாக மீட்டு, தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் வெளியே கொண்டு வந்தார். அவரை, வீரர்கள் கழுவி சுத்தம் செய்தனர். பின், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில், தொழிலாளி முருகனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
மனிதநேயத்துடன் துணிச்சலாக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் சீனிவாசனை பொதுமக்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் பாராட்டினர். முதலுதவிக்குப் பின் முருகனை, அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment