Subscribe:

interesting

உலகத் தமிழ் மாநாடு: சென்னை கடற்கரையில் 10 சிலைகள் திறப்பு




உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, 2_1_1968 அன்று 10 சிலைகள் திறக்கப்பட்டன. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு, 1968 ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் சென்னையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விழாவையொட்டி, 11 தமிழ்ச் சான்றோர்கள் சிலைகள் அமைக்கப்பட்டன.

அவற்றில் அண்ணா சிலை, 1_ந்தேதியன்று சென்னை அண்ணா சாலையில் (ரவுண்டானாவில்) திறந்து வைக்கப்பட்டது. மீதி 10 சிலைகளும் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தன. திறப்பு விழா 2_ந்தேதி மாலை 6_30 மணிக்கு நடைபெற்றது. சிலை திறப்பு விழாவுக்காக கடற்கரை காந்தி சிலை அருகே 12 அடி உயர மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

மேடையில் முதல்_அமைச்சர் அண்ணா, சிலை திறப்பாளர்களும், தலைமை தாங்குகிறவர்களும் உட்கார்ந்து இருந்தார்கள். திருவள்ளுவர் சிலை வழங்கிய நடிகர் சிவாஜி கணேசன், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், மேயர் அபிபுல்லாபேக் ஆகியோரும் மேடையில் இருந்தனர்.

முதலில் உலகத் தமிழ் மாநாட்டு அமைப்புச் செயலாளர் பெருமாள் முதலியார் வரவேற்றுப் பேசினார். அதன்பின் அமைச்சர் நெடுஞ்செழியன் தலைமையில் திருவள்ளுவர் சிலையை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் திறந்தார்.

தொடர்ந்து, அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரமாமுனிவர், கண்ணகி ஆகியோர் சிலைகள் திறக்கப்பட்டன. மேடையின் அருகில் இந்த சிலைகளின் படங்கள் மாட்டப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு சிலையைச் சுற்றிலும் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. சிலை திறப்பாளர்கள் ஒவ்வொருவரும் பேசி முடித்ததும், மேஜை முன்னால் உள்ள பொத்தானை அழுத்தினார்கள். உடனே குறிப்பிட்ட அந்த சிலையின் படத்தைச்சுற்றி மின்சார விளக்குகள் எரிந்தன.

அதே நேரத்தில் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிலையின் திரை விலகியது. இப்படியே ஒவ்வொரு சிலையும் திறக்கப்பட்டன. சிலையைத் திறந்தவர்களின் பெயரும், தலைமை தாங்கியவர்களின் பெயர்களும் வருமாறு:_

1. திருவள்ளுவர் சிலை (சிவாஜிகணேசன் வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் இரா.நெடுஞ்செழியன். திறப்பாளர்:_ கி.ஆ.பெ. விசுவநாதம்)

2. அவ்வையார் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் சத்தியவாணிமுத்து. திறப்பாளர்:_ எஸ்.எஸ்.வாசன்)

3. கம்பர் சிலை. (கோவை மாவட்ட மக்கள் வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் ஏ.கோவிந்தசாமி. திறப்பாளர்:_ பழைய முதல்_மந்திரி பக்தவச்சலம்)

4. ஜி.யு.போப் சிலை. (தென்னிந்திய திருச்சபை வழங்கியது. தலைவர்:_ சட்டப்பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனார். திறப்பாளர்:_ பிஷப் நியூபிகின்)

5. கால்டுவெல். (தென்னிந்திய திருச்சபை வழங்கியது. தலைவர்:_ மேல்_சபைத் தலைவர் மாணிக்கவேலர். திறப்பாளர்:_ பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார்)

6. பாரதியார் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் மாதவன். திறப்பாளர்:_ நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை)

7. பாரதிதாசன் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் முத்துசாமி. திறப்பாளர்:_ மு.வரதராசனார்)

8. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ உணவு அமைச்சர் மதியழகன். திறப்பாளர்:_ பி.டி.ராஜன்)

9. வீரமாமுனிவர் சிலை. (மைலாப்பூர் ஆர்ச் பிஷப் வழங்கியது. தலைவர்:_ சுகாதார அமைச்சர் சாதிக்பாட்சா. திறப்பாளர்:_ ஆர்ச் பிஷப் அருளப்பா)

10. கண்ணகி சிலை. (தமிழக ஆசிரியர்கள் _ மாணவர்கள் அளித்தது. தலைவர்:_ பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதி. திறப்பாளர்:_ ம.பொ.சிவஞானம்)

முடிவில் தமிழக அரசு தலைமை செயலாளர் சி.ஏ.ராம கிருஷ்ணன் நன்றி தெரிவித்துப் பேசினார். விழா முடிந்ததும் அண்ணாவும், மற்ற தலைவர்களும் ஒவ்வொரு சிலை வைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கும் சென்று வணக்கம் செலுத்தினார்கள்.

விழாவைக்காண கடற்கரையில் திரளான கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் அதிக மாக இருக்கும் என்று ஒரு பிரமுகர் மதிப்பிட்டார். அமைச்சர்களின் குடும்பத்தினரும், சினிமா நடிகர்_ நடிகைகள் பலரும் விழாவைக்காண வந்திருந்தனர்.

விழா முழுவதும் சினிமா படமாக எடுக்கப்பட்டது. உலகத் தமிழ் மாநாடு தபால் தலை வெளியிடுவது நிறுத்தப்பட்டது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, ஒரு தபால் தலை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

அதன் பேரில் மத்திய அரசு ஒரு தபால் தலை வெளியிட சம்மதித்தது. ஆனால், இந்த தபால் தலையில் ஒரு எழுத்துக் கூட தமிழில் இல்லை. இந்தி எழுத்துக்களே பொறிக்கப்பட்டு இருந்தன. இந்த தபால் தலை வெளியீட்டு விழா 3-1-1968 அன்று பல்கலைக்கழக தேர்வு மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் தபால் தலை வெளியிடுவது நிறுத்தப்பட்டது. ``மாநாட்டையொட்டி வெளியிடப்பட இருந்த தபால் தலையை வெளியிடாமல் நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது'' என்று முதல்-அமைச்சர் அண்ணா அறிவித்தார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

``விழாவின் புனித தன்மையை களங்கப்படுத்தும் விதத்தில் இந்த தபால் தலை இருக்கிறது. மாநாட்டுக்கு வந்து இருக்கும் பிரதிநிதிகளுக்கு இது வேதனை உண்டாக்கும். ஆகவே தபால் தலை வெளியிடுவது நிறுத்தப்பட்டு விட்டது.

இவ்வாறு அண்ணா கூறினார்.

உலகத் தமிழ் மாநாட்டு தபால் தலை வெளியிடுவது ரத்து செய்யப்பட்டது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் கருத்து தெரிவித்தார்.

``யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சொற்களை தமிழில் பொறித்து இருக்கவேண்டும். தமிழ் மாநாட்டையொட்டி வெளியிடப்படுகின்ற தபால் தலையில், தமிழ் இருக்கவேண்டும். அப்படி இல்லாததால் தபால் தலையை வெளியிடாதது சரிதான்'' என்று சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

1 comment:

  1. புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது: ஜனவரி 14, 1974

    னித உடலை ஊடுருவிப் பார்க்கவும், பெட்டியை திறக்காமலேயே சோதனையிடவும் உதவுகிற எக்ஸ்ரே கருவியை 1896-ஆம் ஆண்டு இதே தேதியில் முதற்தடவையாக காட்சிப்படுத்தினர்.

    எக்ஸ்ரே கருவி முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்ட நாள்: 18-1-1896
    மனித உடலை ஊடுருவிப் பார்க்கவும், பெட்டியை திறக்காமலேயே சோதனையிடவும் உதவுகிற எக்ஸ்ரே கருவியை 1896-ஆம் ஆண்டு இதே தேதியில் முதற்தடவையாக காட்சிப்படுத்தினர்.

    வில்லெம் இராண்ட்ஜன் என்பவர் 1985-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஊர்சுபெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அருகில் இருந்த பேரியம் பிளாட்டினோ சயனைட் பூச்சுடைய ஒரு அட்டை ஒளிர்வதை கண்டார். மின்னிறக்கம் நிகழும்போது ஒளிர்வதும், இல்லாதபோது ஒளிராமலும் இருப்பதை கண்டார். இதற்கு குழாய்களின் சுவர்களிலிருந்து வெளிப்படும் புதிரான ஒருவகை கதிர்களே காரணம் என கருதினார். இக்கதிர்களை அவர் எக்ஸ் கதிர்கள் என அழைத்தார்.


    இக்கதிர்கள் மிக அதிக ஆற்றல் வாய்ந்தவை. இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இக்கதிர்கள் காந்த மின்புலங்களால் பாதிப்பு அடையாது. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்களில் அது பயன்பாட்டுக்கு வந்தது. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்பு முறிவு ஒன்றை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கண்டுபிடிப்புக்காக ராண்ட்ஜன் அவர்களுக்கு 1901-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    ReplyDelete

Followers

Please put vote