"உடலில் வலி இருக்கு;உள்ளத்தில் வலிமை இருக்கு!'
மூன்று வயதில், போலியோவால் பாதிக்கப்பட்ட சாய்கிருஷ்ணன்: எனக்குச் சிறு வயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம். வீட்டில் நடக்கும்
கல்யாண நிகழ்ச்சி முதல் நண்பர்கள் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிக்கும், நான் தான் போட்டோகிராபர்.ஏழாவது படிக்கும் போது, எங்க அப்பா, எனக்கு ஒரு, "ஹாட்-ஷாட்' கேமரா வாங்கிக் கொடுத்தார். அன்றைக்குத் தொடங்கியது எனக்கும், புகைப்படத்துக்குமான உறவு. ஒருநாள், சொந்த ஊருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த போது, என் கண்ணில், செய்தித்தாளில் ஒரு விளம்பரம் தெரிஞ்சது.அதில், "உடல் திறன் குறைபாடுள்ளவர்கள் ஒலிம்பிக்சிலிருந்து உருவாக்கப்பட்ட, எபிலிம்பிக்சில் பங்கு பெறலாம்'னு போட்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சென்னையில் நடந்த தகுதிச் சுற்றுக்கு, என், "ஹாட்-ஷாட்' கேமராவையும், மன உறுதியையும் நம்பி பங்கு பெற்றேன்.
கடந்த, 2004ம் ஆண்டு, தேசிய அளவில் டில்லியில் நடந்த போட்டியில், நான் எடுத்த புகைப்படம், எனக்கு தங்கப் பதக்கம் வாங்கிக் கொடுத்தது. 2006ம் ஆண்டு, ஜப்பானில் நடந்த சர்வதேச எபிலிம்பிக்ஸ் போட்டிக்கு, புகைப்படப் பிரிவில், இந்தியா சார்பாக நான் தேர்வு பெற்றேன். ஷரத் அக்ஷர் என்பவர் தான், கேமரா சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்களையும் எனக்கு சொல்லிக் கொடுத்தார். நான் இந்த அளவுக்கு உயர்ந்து வந்திருப்பதற்கு, என் நண்பர்கள் குமாரசாமி, சுரேஷ் தான் காரணம்.
உடலில் வலி இருக்கு தான்; அதைத் தாண்டி, உள்ளத்தில் வலிமை இருக்கு. என்னை மாதிரி கஷ்டப்படுகிறவர்களுக்கு, இந்த புகைப்படக் கலையை விதையாய் விதைச்சுட்டுப் போவேன்.தென்கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச எபிலிம்பிக்ஸ் போட்டியில், நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வேன். இதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்வேன்!
No comments:
Post a Comment